ரஷ்யா அருகே ஏற்பட்ட பாரிய நிலநடுக்கம்: பல நாடுகளில் சுனாமி எச்சரிக்கை
ரஷ்யாவின் கம்சாட்கா தீபகற்பத்திற்கு அருகே கடலுக்கடியில் 8.8 ரிக்டர் அளவிலான மிக வலுவான நிலநடுக்கம் பதிவாகியுள்ளதுடன் பல நாடுகளில் சுனாமி எச்சரிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கம், பெட்ரோபாவ்லொவ்ஸ்க்-கம்சாட்ஸ்கி நகரத்திலிருந்து கிழக்குத் தெற்கே சுமார் 78 மைல்கள் தொலைவில், 12 மைல் ஆழத்தில் உருவானது.
இந்த நிலநடுக்கத்தையடுத்து, ஹவாய் தீவுகள் மற்றும் அமெரிக்காவின் மேற்கு கரையோரங்களில் உள்ள அலாஸ்கா, வாஷிங்டன், ஓரிகன், கலிபோர்னியா போன்ற மாநிலங்களுக்கும் சுனாமி எச்சரிக்கைகள் மற்றும் கவனிப்பு அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.
சுனாமி எச்சரிக்கை
நிலநடுக்கத்துக்குப் பிந்தைய அதிர்வுகள் 5.2 முதல் 6.9 ரிக்டர் அளவுகளில் பல இடங்களில் பதிவாகியுள்ளன.
ஹவாய் தீவுகளில் அனைத்து கரையோரங்களும் தாக்கத்திற்கு உள்ளாகும் வாய்ப்பு இருப்பதால், மக்கள் உயர் நிலப்பகுதிகளுக்கு உடனடியாக இடம் பெயர வேண்டுமென அரசு அறிவுறுத்தியுள்ளது.
ஜப்பானின் கடலோரங்களில் 10 அடி உயரமுள்ள அலைகள் எழும் அபாயம் இருப்பதால், சில பகுதிகளில் மக்களுக்கு அவசர இடம்பெயர்வு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ, மொன்டெரே, லாஸ் ஏஞ்சலஸ், லா ஜொல்லா ஆகிய நகரங்களில் கடலோரங்களில் ஆழமான நீரோட்டங்கள் மற்றும் அபாயகரமான அலைகள் உருவாகும் அபாயம் இருப்பதாக வானிலை நிலையங்கள் எச்சரிக்கை விடுத்துள்ளன.
ரஷ்யாவின் கம்சாட்கா பகுதியில் 13 அடி உயரமுள்ள சுனாமி அலைகள் தாக்கியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.