வெளிநாடொன்றில் பிரபல டிவி தொகுப்பாளினி உட்பட 12 பேருக்குத் தூக்கு தண்டனை!
எகிப்தில் சட்டவிரோதமாகப் போதைப்பொருட்களைத் தயாரித்து கடத்திய வழக்கில், அந்நாட்டின் பிரபல தொலைக்காட்சி தொகுப்பாளினியான சாரா கலீஃபா உட்பட 12 பேருக்குத் தூக்கிலிட்டு மரண தண்டனை நிறைவேற்றக் கெய்ரோ நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
39 வயதான சாரா கலீஃபா, எகிப்தில் குற்றவியல் தொடர்பான 'மிஷன் இம்பாசிபிள்' என்ற புகழ்பெற்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியின் தொகுப்பாளினியாவார்.
போதைப்பொருள் தயாரிப்பதற்கான மூலப்பொருட்களை இறக்குமதி செய்து, செயற்கைப் போதைப்பொருட்களை உற்பத்தி செய்து விற்பனை செய்த குற்றவியல் கும்பலுடன் இணைந்து செயல்பட்டதாக இவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.

மேலும், உரிமம் பெறாத சட்டவிரோத ஆயுதங்கள் மற்றும் தோட்டாக்களை வைத்திருந்த குற்றச்சாட்டுகளும் இவர்கள் மீது நிரூபிக்கப்பட்டுள்ளன. இந்த வழக்கில் தொடர்புடைய மேலும் 9 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளதுடன், 7 பேர் விடுவிக்கப்பட்டனர்.
கடந்த மாதம் முதற்கட்டத் தீர்ப்பு அறிவிக்கப்பட்ட போதிலும், எகிப்திய சட்டப்படி மரண தண்டனை விவகாரங்களில் எகிப்தின் தலைமை மதத் தலைவரான 'கிராண்ட் முஃப்தி'யின் மத ரீதியான ஆலோசனையைப் பெற்ற பிறகே இத்தீர்ப்பு தற்போது முறைப்படி உறுதி செய்யப்பட்டுள்ளது.
விசாரணையின் போது, 750 கிலோவிற்கும் அதிகமான போதைப்பொருட்களும், அவற்றைச் செய்வதற்குப் பயன்படுத்தப்படும் மூலப்பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
20 சாட்சிகளின் வாக்குமூலங்கள் மற்றும் ஆடியோ/வீடியோ உரையாடல்கள் அடங்கிய மின்னணு ஆதாரங்கள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டன.
எனினும் தன் மீதான குற்றச்சாட்டுகளை சாரா கலீஃபா முற்றிலுமாக மறுத்துள்ளார். போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அலுவலகத்தில் வைத்துப் புகைப்படம் எடுக்கப்படும் வரை தான் போதைப்பொருட்களைப் பார்த்ததே இல்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.
இந்தத் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யவுள்ளதாகச் சாரா கலீஃபாவின் வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, சர்வதேச மன்னிப்புச் சபை வெளியிட்ட 2025 ஆம் ஆண்டின் அறிக்கையின்படி, எகிப்தில் அந்த ஆண்டில் மட்டும் 492 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டு, அதில் 23 தண்டனைகள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
சர்வதேச சட்ட விதிகளின்படி "திட்டமிட்ட கொலை" குற்றங்களுக்கு மட்டுமே மரண தண்டனை விதிக்கப்பட வேண்டும் என்ற போதிலும், போதைப்பொருள் கடத்தல் மற்றும் பாலியல் வன்கொடுமை போன்ற குற்றங்களுக்கும் எகிப்தில் மரண தண்டனை வழங்கப்படுவதாக அந்த அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.