ஒட்டாவாவில் பயங்கர தீ விபத்து: இருவர் பலி, சிலர் மீட்பு
கனடாவின் ஒட்டாவா நகரில் உள்ள 'சென்டர்டவுன்' (Centretown) பகுதியில் அமைந்துள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் ஏற்பட்ட பாரிய தீ விபத்தில் சிக்கி இருவர் உயிரிழந்துள்ளனர்.
395 சோமர்செட் ஸ்ட்ரீட் வெஸ்ட் (Somerset Street West) பகுதியில் உள்ள 19 மாடிகளைக் கொண்ட குடியிருப்பின் மேல் தளத்திலேயே இந்தத் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புப் படையினர், கடும் புகை மற்றும் வெப்பத்திற்கு மத்தியில் துணிச்சலாகச் செயற்பட்டு குடியிருப்பினுள் சிக்கியிருந்தவர்களை மீட்டனர். விபத்தில் சிக்கிய இருவர் உயிரிழந்துள்ளனர்.
ஒருவர் சம்பவ இடத்திலும், மற்றொருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னரும் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அவர்களில் ஒருவரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
தீ விபத்து ஏற்பட்ட வீட்டின் பால்கனியில் புகையினால் தப்பிச் செல்ல முடியாமல் சிக்கியிருந்த ஒருவரையும், அருகில் இருந்த மற்றுமொரு குடியிருப்பாளரையும் தீயணைப்புப் படையினர் பாதுகாப்பாக மீட்டனர்.

தீ விபத்து ஏற்பட்ட வீட்டின் உள்ளே இலத்திரனியல் மிதிவண்டி (e-bike) ஒன்று இருந்துள்ளது.
எனினும், அந்த மிதிவண்டியால் தீ ஏற்பட்டதா அல்லது வேறு காரணத்தால் ஏற்பட்ட தீ மிதிவண்டிக்குப் பரவியதா என்பது குறித்து இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.
தீயணைப்புப் படையினர் 23 நிமிடங்களுக்குள் தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததாகவும், இதனால் மற்றைய வீடுகளுக்குத் தீ பரவுவது தடுக்கப்பட்டதாகவும் ஒட்டாவா தீயணைப்புப் படையினர் தெரிவித்துள்ளனர்.