ஹார்முஸ் ஜலசந்தியில் விபத்தில் சிக்கிய 2 எண்ணெய் கப்பல்கள் ; அமெரிக்காவை குற்றம்சாட்டும் ஈரான்
ஹார்முஸ் ஜலசந்தி வழியாக சென்ற 2 எண்ணெய் கப்பல்கள் கண்ணிவெடியில் மோதி வெடிவிபத்தில் சிக்கியதாக ஈரான் தெரிவித்துள்ளது.
மேலும், அமெரிக்காவின் தவறான வழிகாட்டுதலை பின்பற்றி, ஹார்முஸ் ஜலசந்தியில் தடை செய்யப்பட்ட ஆபத்தான பாதை வழியாக சென்றதன் காரணமாகவே இந்த விபத்து ஏற்பட்டதாகவும் ஈரான் குற்றம்சாட்டியுள்ளது.

ஆனால் ஈரானின் குற்றாச்சாட்டை அமெரிக்கா மறுத்துள்ளது.
இந்த குற்றச்சாட்டுக்கு பதிலளிக்கும் விதமாக அமெரிக்க மத்திய கட்டளை மையம் (CENTCOM) ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “ஈரான் புரட்சிகர காவல்படையின் பெரும்பாலான குற்றச்சாட்டுகளைப் போலவே இதுவும் பொய்யானது" என்று பதிவிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் சமீபத்தில், துருக்கியின் அங்காரா நகரில் நடந்த நேட்டோ உச்சி நாடுகளின் மாநாட்டில் கலந்து கொண்டு பேசும்போது, ஈரானுடனான போர் நிறுத்த புரிந்துணர்வு ஒப்பந்தம் ரத்து செய்யப்படுகிறது என திடுக்கிடும் அறிவிப்பை வெளியிட்டார்.
இதனால் அமெரிக்கா-ஈரான் இடையே மீண்டும் போர் பதற்றம் அதிகரித்து உள்ளமை குறிப்பிடதக்கது.