ஹமில்டனில் இடம்பெற்ற விபத்தில் இருவர் பலி
கனடாவின் ஹமில்டன் நகரில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை இடம்பெற்ற கார் விபத்தில் காரைச் செலுத்திய ஓட்டுநரும், அவருடன் பயணம் செய்த பெண்ணும் உயிரிழந்ததாக ஹமில்டன் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
ஞாயிற்றுக்கிழமை அதிகாலை சுமார் 4:40 மணியளவில், கிளாரிமாண்ட் டிரைவ், கிளாரிமாண்ட் அக்சஸ் மற்றும் அப்பர் ஜேம்ஸ் ஸ்ட்ரீட் பகுதியில் கார் விபத்துக்குள்ளானதாக அவசரக்கால மீட்புக் குழுவினருக்குத் தகவல் கிடைத்தது.
உடனடியாகச் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் மற்றும் மீட்புக் குழுவினர், காரில் இருந்த ஓட்டுநரையும் பெண் பயணியையும் பரிசோதித்தனர்.

ஆனால், அவர்கள் இருவரும் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது. உயிரிழந்த இருவரும் ஹாமில்டன் நகரைச் சேர்ந்தவர்கள் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
அவர்களின் பெயர் அல்லது வயது குறித்த கூடுதல் விவரங்கள் இதுவரை வெளியிடப்படவில்லை. இந்த விபத்து எதனால் ஏற்பட்டது என்பது குறித்து இன்னும் தெளிவான காரணம் தெரியவில்லை எனப் புலனாய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்தச் சம்பவம் குறித்து ஹாமில்டன் காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "இந்த விபத்தை நேரில் பார்த்த சாட்சிகள் எவரேனும் இருந்தால் உடனடியாக முன்வந்து தகவல் அளிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்," என குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், விபத்து நடந்த நேரத்தில் அந்தப் பகுதியில் பயணித்த வாகன சாரதிகள் தங்கள் வாகனத்திலுள்ள டேஷ்கேம்களை (Dashcam) சரிபார்க்குமாறும், அப்பகுதியில் உள்ள வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்கள் தங்கள் கண்காணிப்பு கேமரா (CCTV) பதிவுகளை ஆய்வு செய்து காவல்துறைக்கு உதவுமாறும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.