ஸ்கார்பரோவில் துப்பாக்கிச் சூடு: இருவர் பலி!
கனடாவின் டொராண்டோ நகரிலுள்ள ஸ்கார்பரோ பகுதியில், எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றிற்கு வெளியே இன்று அதிகாலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் இருவர் உயிரிழந்துள்ளதோடு, மற்றுமொருவர் படுகாயமடைந்துள்ளார்.
இன்று அதிகாலை 12:30 மணியளவில் எல்லெஸ்மியர் மற்றும் பிரிம்லி வீதிக்கு அருகிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு வெளியே துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக டொராண்டோ காவல்துறையினருக்குத் தகவல் கிடைத்துள்ளது.
சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான மூன்று ஆண்களை மீட்டு உடனடியாக வைத்தியசாலையில் அனுமதித்தனர்.

எனினும், அவர்களில் இருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மூன்றாவது நபர் படுகாயமடைந்துள்ள போதிலும், அவரது உயிருக்கு ஆபத்தில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை டொராண்டோ காவல்துறையின் கொலை மற்றும் காணாமல் போனோர் பிரிவு பொறுப்பேற்றுள்ளது.
விசாரணைகள் காரணமாக பிரிம்லி வீதிக்கு மேற்கே உள்ள எல்லெஸ்மியர் வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. இதனால், வாகன சாரதிகள் மாற்றுப் பாதைகளைப் பயன்படுத்துமாறு காவல்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.
சந்தேகநபர்கள் குறித்தோ அல்லது துப்பாக்கிச் சூட்டிற்கான காரணம் குறித்தோ காவல்துறையினர் இதுவரை எவ்வித தகவலையும் வெளியிடவில்லை. மேலதிக விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.