பொதுவெளியில் ஆயுதங்களை ஏந்தி போராட்டம்; ஈரானில் வெளியில் தூக்கிலிடப்பட்ட இருவர்!
ஈரானில் அரசுக்கு எதிராகப் போராட்டத்தில் ஈடுபட்டு வன்முறையில் ஈடுபட்டதாகக் குற்றம்சாட்டப்பட்ட இரண்டு நபர்களுக்கு இன்று (28) பொதுவெளியில் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாகச் சவர்வதேச செய்திகள் வெளியாகியுள்ளன.
அபோல்ஃபாஸ்ல் செபாஹி மற்றும் அமீர்-ஹொசைன் சபாஹி ஆகிய இருவரும் கடந்த ஜனவரி 8 ஆம் திகதி பொலிஸ்அதிகாரிகளை ஆயுதங்களால் தாக்கி, பெட்ரோல் ஊற்றித் தீ வைத்து கொலை செய்ததாக இவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஆயுதங்களால் தாக்கி, பெட்ரோல் ஊற்றித் தீ வைத்து கொலை
அத்துடன், பொதுவெளியில் ஆயுதங்களை ஏந்தி அச்சத்தை உண்டாக்கியது, நாட்டின் பொது ஒழுங்கையும் அமைதியையும் சீர்குலைத்தது மற்றும் மனசாட்சியற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டது ஆகியவை முதன்மைக் குற்றச்சாட்டுகளாக முன்வைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், மத்திய இஸ்ஃபஹான் மாகாணத்தில் உள்ள மாலெக்ஷாஹர் நகரின் பொதுச் சதுக்கத்தில், பொதுமக்கள் முன்னிலையில் இருவரும் தூக்கிலிடப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
. ஈரானில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தொடங்கி ஜனவரியில் அரசுக்கு எதிரான போராட்டங்கள் தீவிரமடைந்துள்ள நிவையில், இந்த வன்முறைச் சம்பவங்களில் 3,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இப்போராட்டங்களைத் தொடர்ந்து ஈரான் முழுவதும் பலர் கைது செய்யப்பட்டு மரண தண்டனைகள் நிறைவேற்றப்படுவது அதிகரித்துள்ளது. சர்வதேச அரசியல் விமர்சகர்களின் கூற்றுப்படி, உலக அளவில் சீனாவிற்கு அடுத்தபடியாக அதிக அளவில் மரண தண்டனைகளை நிறைவேற்றும் நாடாக ஈரான் உள்ளது குறிப்பிடத்தக்கது