நேபாள பேரழிவு ;9 நாட்களுக்கு பின் உயிருடன் மீட்கப்பட்ட இருவர்!
இயற்கை கோர தாண்டவத்தில் ஆயிரத்திற்கு மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில் நேபாளத்தின் ரசுவா மாவட்டத்தில் உள்ள திரிஷூலி-3ஏ நீர்மின் நிலைய சுரங்கத்தில் சிக்கியிருந்த இருவர், 9 நாட்களுக்கு பிறகு உயிருடன் மீட்கப்பட்டுள்ள சம்பவம் பதிவாகியுள்ளது .
சஞ்சய் சாஹ் என்ற மெக்கானிக்கல் ஃபோர்மேன் மற்றும் கபீர் மகர்ஜன் என்ற மெக்கானிக்கல் சூப்பர்வைசர் ஆகிய இருவரும் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்னும் பலர் உயிருடன் இருக்கக்கூடும் என்ற நம்பிக்கை..
ஆகஸ்ட் 26ஆம் தேதி ஏற்பட்ட பேரழிவை தொடர்ந்து, திரிஷூலி-3ஏ திட்டத்தில் மட்டும் சுமார் 40 பேர் காணாமல் போயுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கிடையே, சுரங்கத்தின் ஆழப்பகுதியில் இருந்து மேலும் பலரின் குரல்கள் கேட்கப்பட்டதாக மீட்புக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.
இதனால், இன்னும் பலர் உயிருடன் இருக்கக்கூடும் என்ற நம்பிக்கை அதிகரித்துள்ளது. நேபாள ராணுவம் மற்றும் ஆயுதம் தாங்கிய காவல் படையினர் சுரங்கத்துக்குள் தீவிரமாக சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதே நேரத்தில், ரசுவா லாங்டாங் கோலா நீர்மின் திட்ட சுரங்கத்தில் இருந்து இருவரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. அந்த திட்டத்தில் பணியாற்றிய 41 பேருடன் இதுவரை தொடர்பு ஏற்படவில்லை என கூறப்படுகிறது.
மீட்புப் பணிகள் மோசமான வானிலை மற்றும் சேதமடைந்த கட்டமைப்புகளால் சவால்களை சந்தித்து வருகின்றன. இருப்பினும், சுரங்கத்துக்குள் இருந்து குரல்கள் கேட்பது குடும்பங்களுக்கு புதிய நம்பிக்கையை அளித்துள்ளது.