உக்ரைனுக்கு அந்த அந்தஸ்தை வழங்கிய நேட்டோ உறுப்பு நாடுகள்
உக்ரைன் நாட்டை தங்கள் குழுவில் இணைத்துக் கொள்ள உறுப்பு நாடுகள் அனைவரும் ஒப்புதல் அளித்துள்ளதாக நேட்டோ தலைவர் தகவல் வெளியிட்டுள்ளார்.
இதனால், உக்ரைனுக்கு இராணுவ உதவியும் உரிய ஆதரவும் கிடைக்க இது வாய்ப்பாக அமையும் என கூறப்படுகிறது. உக்ரைன் நாட்டை சேர்ந்த பாதுகாப்பு ஒப்பந்த குழு ஒன்றுடன் ஜேர்மனியில் பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட நேட்டோ தலைவர் ஜென்ஸ் ஸ்டோல்டன்பெர்க் இதை தெரிவித்துள்ளார்.
மேலும், உக்ரைனில் போர் முடிவுக்கு வந்த பின்னர், இதுபோன்ற இன்னொரு தாக்குதலை தடுக்கும் வகையிலான கட்டமைப்புகளை உக்ரைன் உருவாக்க வேண்டும் எனவும் ஜென்ஸ் ஸ்டோல்டன்பெர்க் கேட்டுக்கொண்டுள்ளார்.
முன்னதாக, உக்ரைன் எங்கள் கூட்டணியில் உறுப்பினராகும் என்று நேட்டோ நட்பு நாடுகள் ஒப்புக் கொண்டுள்ளன என தெரிவித்திருந்த ஜென்ஸ் ஸ்டோல்டன்பெர்க், ஆனால் அதே நேரத்தில் அது ஒரு நீண்ட கால நடவடிக்கை எனவும் குறிப்பிட்டிருந்தார்.
போர் எப்போது முடிவுக்கு வரும் என்பது எவராலும் கணிக்க முடியாது, ஆனால் உக்ரைன் மீதான இந்த போர் முடிவுக்கு வந்தால், வரலாறு திரும்பாது என்பதை நாம் உறுதி செய்தாக வேண்டும் என்றார்.
அதன்பொருட்டு, உக்ரைனின் ராணுவ பலத்தை அதிகரிக்க முதன்மையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என ஜென்ஸ் ஸ்டோல்டன்பெர்க் தெரிவித்துள்ளார். உக்ரைன் நேட்டோ உறுப்பு நாடாக மாறும் என்றால் அதன் விளைவுகளை சந்திக்க நேரிடும் என ரஷ்யா தொடர்ந்து மிரட்டல் விடுத்து வருகிறது.
நேட்டோ உறுப்பு நாடாக உக்ரைன் மாறாமல் இருக்கவும், ரஷ்ய எல்லையில் நேட்டோ படைகளை கொண்டுவராமல் இருக்கவும் தான் உக்ரைன் மீது ரஷ்யா படையெடுத்துள்ளதாக தமது உள்ளூர் மக்களிடம் விளாடிமிர் புடின் விளக்கமளித்துள்ளார்.
ரஷ்யா தோற்கடிக்கப்பட வேண்டும் என்பதே அனைவரின் ஒருமித்த கருத்தாக உள்ளது என குறிப்பிட்டுள்ள ஜென்ஸ் ஸ்டோல்டன்பெர்க், அதற்காக உக்ரைனை ஆதரிக்க வேண்டும் என்றார்.