நேரடி பேச்சுவார்த்தைகளே போர் நிறுத்தத்திற்கு வழிவகுக்கும்! இந்தியா
உக்ரைன் ரசாயன ஆயுதங்களை உருவாக்கி வருவதாக கூறியுள்ள ரஷ்யாவின் குற்றச்சாட்டை அமெரிக்கா மறுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இது தொடர்பாக விசாரிக்க ஐ.நா. சபை பாதுகாப்பு கவுன்சிலை உடனே கூட்ட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தது.
இதையடுத்து ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சில் கூட்டம் நியூயார்க் நகரில் நேற்றைய தினம் வியாழக்கிழமை (11-03-2022) நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் பேசிய ரஷ்ய நிரந்தர பிரதிநிதி வசிலி நெபென்சியா, அமெரிக்க பாதுகாப்பு அமைச்சகத்தின் ஆதரவுடன் உக்ரைன் ராணுவத்தின் ரசாயன உயிரியல் ஆயுத தயாரிப்பு திட்டம் பற்றிய அதிர்ச்சி உண்மைகளை நாங்கள் கண்டுபிடித்தோம் என தெரிவித்துள்ளார்.
உக்ரைனில் 30 உயிரியல் ஆய்வகங்களின் வலையமைப்பு இருப்பதை உறுதிப்படுத்தும் ஆவணங்கள் ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சகத்திடம் இருப்பதாக அவர் கூறினார்.
இதற்கு மறுப்பு தெரிவித்து பேசிய ஐ.நா.வுக்கான அமெரிக்க பிரதிநிதி, உக்ரைனிடம் ரசாயன உயிரியல் ஆயுத தயாரிப்பு திட்டம் இல்லை என்றும், அமெரிக்காவால் ஆதரிக்கப்படும் உயிரியல் ஆயுத ஆய்வகங்கள் எதுவும் உக்ரைனில் மற்றும் ரஷ்யாவின் எல்லைக்கு அருகில் இல்லை என்றும் மறுப்பு தெரிவித்துள்ளார்.
இந்த கூட்டத்தில் பேசிய ஐ.நா.வுக்கான இந்தியாவின் நிரந்தர உறுப்பினர் டி.எஸ்.திருமூர்த்தி (T. S. Tirumurti), உக்ரைனில் தற்போதைய நிலைமை குறித்து இந்தியா பலமுறை தீவிர கவலையை வெளிப்படுத்தி உள்ளது என கூறினார்.
ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே நடக்கும் நேரடி பேச்சுவார்த்தைகளே போர் நிறுத்தத்திற்கு வழிவகுக்கும் என்று இந்தியா நம்புவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
தூதரக ரீதியான நடவடிக்கை மற்றும் பேச்சுவார்த்தை பாதையைத் தவிர வேறு வழியில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.