விரைவில் சந்திக்கவுள்ள புடின் - ஜெலன்ஸ்கி! போர் முடிவுக்கு வருமா?
உக்ரைன் - ரஷ்யா இடையே துருக்கியில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
உக்ரைன் மீது ரஷ்யா 34-வது நாளாக தொடர்ந்து தாக்குதல் தொடுத்து வருகிறது. போரை முடிவுக்கு கொண்டு வர பல நாடுகள் முயற்சித்த போதும் அந்த முயற்சிகள் தோல்வியிலேயே முடிந்து வருகின்றன.
பெலாரஸ் நாட்டில் உக்ரைன் - ரஷ்யா இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது. அந்த பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது. இதனையடுத்து, இரு நாடுகளுக்கும் இடையே துருக்கியில் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
துருக்கி தலைநகர் இஸ்தான்புல்லில் இன்று செவ்வாய்கிழமை (29-03-2022) இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது. துருக்கி அதிபர் தாயூப் எர்டோகன் தலைமையில் இந்த பேச்சுவார்த்தை நடைபெற்றது.
இந்த பேச்சுவார்த்தையின் போது உக்ரைனின் கீவ் நகர் அருகேயும், ஜெர்னிகிவ் நகரிலும் படைகளை குறைக்க ரஷ்யா சம்மதம் தெரிவித்துள்ளது.
மேலும், இந்த பேச்சுவார்த்தை அர்த்தமுள்ள வகையில் இருந்ததாக பேச்சுவார்த்தைக்குழுவில் இடம்பெற்றிருந்த ரஷ்ய அதிகாரிகள் தெரிவித்தனர்.
பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ள நிலையில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் (Vladimir Putin) - உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி (Volodymyr Zelenskyy) விரைவில் சந்திக்க வாய்ப்பு உள்ளதாக உக்ரைன் பேச்சுவார்த்தைக்குழுவில் இடம்பெற்றிருந்த அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
உக்ரைன் - ரஷ்யா இடையேயான பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதால் 34 நாட்களாக நடைபெற்று வரும் போர் விரைவில் முடிவுக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.