நீடிக்கும் போர் பதிலடித் தாக்குதல்களின் புதிய கட்டத்தை அறிவித்த உக்ரைன்
ரஷ்யா - உகரைன் போர் பதற்றம் தீவிரமடையும் நிலையில் உக்ரைன், ரஷ்யாவுக்கு எதிரான பதிலடித் தாக்குதல்களின் புதிய கட்டத்தை அறிவித்துள்ளது. ரஷ்யா - உக்ரைன் மீது படையெடுத்து 6 மாதங்கள் கடந்துள்ள நிலையில் கீவ் அந்த அறிவிப்பை வெளியிட்டது.
இந்நிலையில் ரஷ்யாவின் பிடியில் இருக்கும் ஹெர்சன் (Kherson) நகரை மீட்டுக்கொள்ளக் கீவ் தாக்குதல்களை மேற்கொண்டது. அவற்றில் 4 கிராமங்கள் விடுவிக்கப்பட்டதாக CNN செய்தி நிறுவனம் குறிப்பிட்டது.
அங்குள்ள முக்கியச் சாலைகளை முடக்கவும் ரஷ்யத் துருப்பினர் அதன்வழி செல்வதைத் தடுக்கவும் பல வாரங்களாக உக்ரேன் அந்த வட்டாரத்தில் தாக்குதல்களை நடத்தியுள்ளது.
இதற்கிடையே, உக்ரேன் தாக்குதல்களை மேற்கொண்டதை ரஷ்யா ஒப்புக்கொண்டுள்ளது. இருப்பினும், கீவின் தாக்குதல் அதற்கே பாதிப்பை ஏற்படுத்தியதாக ரஷ்யா கூறியது.
உக்ரேனின் பதிலடி நடவடிக்கை
ஆனால் உக்ரேனின் பதிலடி நடவடிக்கைகளால் ரஷ்யாவின் ராணுவம் பாதிக்கப்பட்டிருப்பதாக அமெரிக்காவின் வெள்ளை மாளிகை அதிகாரிகள் தெரிவித்தனர். உக்ரேனின் தெற்கில் கூடுதல் துருப்பினரை ரஷ்யா குவித்திருப்பதாகவும் கிழக்கு, டோன்பாஸ் வட்டாரங்களில் ரஷ்யத் துருப்பினரின் எண்ணிக்கை குறைந்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.
மேலும் அமெரிக்கா வழங்கியிருந்த அதிநவீன HIMARS எறிபடை பாய்ச்சும் சாதனங்களைக் கொண்டு உக்ரேன் ரஷ்யாவுக்கு எதிரான தாக்குதலை நடத்தமுடிந்ததாக அமெரிக்க அதிகாரிகள் குறிப்பிட்டனர்.