போலந்தில் இருந்து இந்தியர்களுடன் டெல்லி புறப்பட்ட முதல் விமானம்!
ரஷ்யா நடத்தி வரும் போர் காரணமாக உக்ரைனில் உள்ள எஞ்சியுள்ள மாணவர்கள் மற்றும் இந்தியர்களை அழைத்து வரும் கங்கா திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி உள்ளது.
இந்த பணிகளை மேற்பார்வையிடுவதற்காக பிரதமர் மோடி, (Narendra Modi) நான்கு மத்திய மந்திகளை உக்ரைன் அண்டை நாடுகளுக்கு சிறப்பு தூதர்களாக அனுப்பியுள்ளார்.
இந்நிலையில், மத்திய மந்திரி விஜய் குமார் சிங் (Vijay Kumar Singh) போலந்து நாட்டிற்கு சென்றுள்ளார். இந்திய தூதரக அதிகாரிகளை சந்தித்த அவர், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சக வழிகாட்டுதல்களைக் கண்காணிக்குமாறு கேட்டுக் கொண்டார். போலந்து தலைநகர் வார்சாவில் உள்ள குரு சிங் சபாவில் இந்திய மாணவர்களை சந்தித்து அவர் பேசினார்.
இந்நிலையில் உக்ரைன் எல்லை வழியே போலந்திற்கு அழைத்து வரப்பட்ட இந்தியர்கள் ரெஸ்ஸோவ் நகரில் உள்ள விமான நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த சிறப்பு விமானம் மூலம் டெல்லி அழைத்து வரப்படுகின்றனர்.
இந்தியர்களுடன் போலந்தில் இருந்து முதல் சிறப்பு விமானம் டெல்லி புறப்பட்டுள்ளதாக மத்திய மந்திரி, விஜய் குமார் சிங் (Vijay Kumar Singh) தமது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.
முன்னதாக விமான நிலையத்தில் மாணவர்களை சந்தித்து வி.கே.சிங் அவர்களுடன் உரையாடினார்.
உக்ரைனில் உள்ள ஒவ்வொரு இந்தியரையும் திரும்ப அழைத்து வரும் வரை நாங்கள் ஓய்வெடுக்க மாட்டோம் என்றும் அவர் குறிப்பிட்டார்.