உக்ரைனில் இருக்கும் அமெரிக்கர்களுக்கு வெள்ளைமாளிகை விடுத்த அவசர அறிவுறுத்தல்
உக்ரைனில் இருக்கும் அமெரிக்கர்கள் அடுத்த 48 மணித்தியாலத்திற்குள் வெளியேறுமாறு வெள்ளைமாளிகை அறிவுறுத்தியுள்ளது.
ரஷ்யா உக்ரைன் எல்லையில் கடந்த ஆண்டு நவம்பர் முதல் தனது படைகளை குவித்து வருகிறது. இதுவரையில் 1 லட்சத்திற்கும் அதிகமான வீரர்களையும் உக்ரைன் எல்லையில் ரஷ்யா குவித்துள்ளது.
இந்நிலையில், உக்ரைன் மீது ரஷ்யா படையெடுக்கலாம் என்ற அச்சம் நிலவி வருகிறது. அமெரிக்கா தலைமையிலான நேட்டோ அமைப்பில் உக்ரைனை சேர்ப்பதற்கும் ரஷ்யா எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
ரஷ்யா படையெடுக்கும்பட்சத்தில் உக்ரைனுக்கும் ஆதரவளிப்போம் என நேட்டோ மற்றும் அமெரிக்கா தெரிவித்துள்ளது. இதனால், ரஷ்யா - உக்ரைன் எல்லையில் போர் பதற்றம் அதிகரித்து வருகிறது. போர் பதற்றத்தை தணிக்க பல்வேறு நாடுகள் முயற்சித்து வருகின்றன.
அதேவேளை உக்ரைன் மீது படையெடுக்கும் எண்ணமில்லை என ரஷ்யா தெரிவித்து வருகிறது. ஆனால், பெலாரசுடன் இணைந்து ரஷ்யா போர் பயிற்சிகளில் ஈடுபட்டு வருகிறது.
சீனாவில் நடைபெற்று வரும் குளிர்கால ஒலிம்பிக் நிறைவடைந்த உடன் உக்ரைன் மீது ரஷ்யா படையெடுக்கலாம் என அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி ஆண்டனி பிளிங்கன் தெரிவித்துள்ளார். வான்வெளி தாக்குதல் மூலம் படையெடுப்பு நடைபெறும் என வெள்ளைமாளிகை தெரிவித்துள்ளது.
இதனிடையே, உக்ரைன் விவகாரம் தொடர்பாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுடன் (Vladimir Putin) அமெரிக்க அதிபர் ஜோ பைடன் (Joe Biden) இன்று சனிக்கிழமை (12-02-2022) தொலைபேசி மூலம் பேச்சுவார்த்தை நடத்துகிறார்.
இந்த பேச்சுவார்த்தையில் உக்ரைனில் போர் பதற்றத்தை தணிக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்கும்படி புதினிடம் பைடன் அறிவுறுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், உக்ரைனில் இருந்து அமெரிக்க குடிமக்கள் அனைவரும் அடுத்த 48 மணி நேரத்திற்குள் வெளியேறும்படி அமெரிக்காவின் வெள்ளைமாளிகை அறிவுறுத்தியுள்ளது.
அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சுலைவென் இன்று வெள்ளைமாளிகையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, அடுத்த 48 மணி நேரத்திற்குள் அமெரிக்கார்கள் உக்ரைனை விட்டு வெளியேறியும்படி அவர் அறிவுறுத்தினார்.
மேலும், உக்ரைன் மீது படையெடுக்க தேவையான ராணுவ தளவாடங்கள், வீரர்களை ரஷியா நிலைநிறுத்திவிட்டது. மிக விரைவாக உக்ரைன் தலைநகர் கிவ் மீது விமானம் மூலம் வெடிகுண்டுகளை வீசி ரஷியா படையெடுப்பை தொடங்கலாம்.
சீனாவில் நடைபெற்று வரும் குளிர்கால ஒலிம்பிக் நிறைவடைவதற்கு முன்பே (பிப். 20) தாக்குதல் தொடங்கலாம். உக்ரைன் மீது படையெடுப்பதற்கான இறுதி முடிவை ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் எடுக்க உள்ளார்.
அவர் முடிவெடுத்து உத்தரவிட்ட உடன் படையெடுப்பு நடைபெறலாம். அது எப்போது வேண்டுமானாலும் அந்த முடிவை புதின் எடுக்கலாம்’ என்றார்.