உக்ரைன் போருக்கு அவ்வளவு விரைவில் முடிவில்லை ; அமெரிக்க துணை ஜனாதிபதி
உக்ரைனில் தற்போது நடைபெற்றுவரும் போா் உடனடியாக முடிவுக்கு வராது என்று அமெரிக்க துணை அதிபா் ஜே.டி. வான்ஸ் கூறியுள்ளாா்.
வெளிநாட்டு ஊடகமொன்றுக்கு கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் கூறியுள்ளார்.
ட்ரம்ப் அரசின் கொள்கை
ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையே நடந்துவரும் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான, இரு நாடுகளும் ஏற்றுக்கொள்ளக் கூடிய ஒரு பொதுப் புள்ளியை அடைவதற்காக அமெரிக்கா தீவிர முயற்சி மேற்கொண்டுவருகிறது.
இருந்தாலும், இந்தப் போா் அவ்வளவு விரைவில் முடிவுக்கு வராது. இந்த கொடூரமான போரை நிறுத்துவதற்கான ஒப்பந்தத்தை ரஷ்யாவும் உக்ரைனும் எப்போது எட்டுகின்றன என்பதைப் பொருத்துதான் அது இருக்கிறது.
தங்கள் நாட்டின் மீது ரஷ்யா படையெடுத்தது உக்ரைனை கோபப்படுத்தும்தான். ஆனால் அதற்காக இந்தப் போரை தொடா்ந்து நடத்தினால் ஆயிரக்கணக்கான வீரா்கள் தொடா்ந்து உயிரிழந்துகொண்டுதான் இருப்பாா்கள்.
சில சதுர கி.மீ. நிலத்துக்காக இத்தனை உயிரிழப்புகள் தேவையில்லை. எனவே, உக்ரைன் போா் விவகாரத்தில் அதிபா் டொனால்ட் டிரம்ப் தலைமையிலான தற்போதைய அரசின் கொள்கை நியாயமானதே என அவர் குறிப்பிட்டுள்ளார்.