கனடாவில் வேலையற்றோர் எண்ணிக்கையில் உயர்வு
2025 ஆம் ஆண்டின் இறுதியில் கனடாவில் வேலைவாய்ப்பின்மை விகிதம் உயர்ந்துள்ளதாக கனடிய புள்ளிவிபரவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
டிசம்பர் மாதத்தில் கனடா பொருளாதாரம் 8,200 புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கியுள்ளதாக அந்த நிறுவனம் கூறியுள்ளது. இது பொருளாதார நிபுணர்கள் எதிர்பார்த்ததை விட அதிகமானதாகும்.
இருப்பினும், வேலை தேடும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்ததால் வேலைவாய்ப்பின்மை விகிதம் 6.8 சதவீதமாக உயர்ந்துள்ளது. நவம்பர் மாதத்தில் இது 6.5 சதவீதமாக காணப்பட்டது.

ஒன்டாரியோ மற்றும் கியூபெக் மாகாணங்களில் வேலைவாய்ப்புகள் அதிகரித்திருந்தாலும், அந்த அளவு தொழிலாளர் படை வளர்ச்சியை ஈடுகட்டாததால், அந்த மாகாணங்களில் வேலைவாய்ப்பின்மை விகிதம் உயர்ந்துள்ளதாக தரவுகள் காட்டுகின்றன.
வேலை செய்யக்கூடிய நிலையில் இருந்து வேலை தேடும் அனைவரும் வேலைவாய்ப்பின்மை வரையறையில் அடங்குவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அதிகமான மக்கள் வேலை சந்தையில் இணைவது “நல்ல அறிகுறி” என ஆர்.பி.சீ வங்கியின் துணைத் தலைமை பொருளாதார நிபுணர் நாதன் ஜான்சன், தெரிவித்தார்.
வேலை தேடுபவர்கள் அதிகரிப்பதால் வேலைவாய்ப்பின்மை விகிதம் உயரும் என்றாலும், வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கை மக்களிடையே அதிகரித்திருப்பதையே இது காட்டுகிறது என அவர் விளக்கினார்.
வேலை தேடுவதை விட்டுவிடும் மனநிலையிலுள்ளோர் அதிகரிப்பதே கவலைக்குரிய நிலை என அவர் குறிப்பிட்டுள்ளார்.