பேருந்தில் மாணவிக்கு நேர்ந்த கதி
ஹொரணையில் இருந்து கொழும்புக்கு தனியார் பேருந்தில் பயணித்த பல்கலைக்கழக மாணவியிடம் தவறான முறையில் நடந்துக் கொண்ட நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட நபர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் அவர் தொடர்பான வழக்கு டிசம்பர் முதலாம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள கொழும்பு தலைமை நீதவான் உத்தரவிட்டார்.
ஹொரணையில் இருந்து கொழும்பு பல்கலைக்கழகத்திற்கு தனியார் பேருந்தில் பயணித்த மாணவியின் பின்னால் அமர்ந்திருந்த சந்தேக நபர் பல சந்தர்ப்பங்களில் மாணவியின் பின் பகுதியை அழுத்தியுள்ளார்.
இந்த சம்பவத்தால் அவமானமடைந்த மாணவி, பேருந்தில் குரல் எழுப்பியபோது, பேருந்தில் இருந்த சிவில் உடையில் இருந்த பொலிஸ் அதிகாரிகள் குழு சந்தேக நபரைப் பிடித்து குருந்துவத்த பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
சம்பவம் தொடர்பாக பொலிஸார் நீதிமன்றத்தில் சமர்ப்பித்த தகவல்களை கருத்தில் கொண்ட தலைமை நீதிபதி, சந்தேக நபரை 2 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 2 சரீரப் பிணைகளில் விடுவிக்க உத்தரவிட்டார். வீரகெட்டிய பகுதியைச் சேர்ந்த சந்தேக நபர் பிணையில் விடுவிக்கப்பட்டார்.