இவர்களுக்கு மட்டும் கொஞ்சம் காலத்துக்கு கனடாவுக்குள் அனுமதி கிடையாது: கனடா பிரதமர்
தடுப்பூசி பெறாத சுற்றுலாப்பயணிகளுக்கு மட்டும், கொஞ்சம் காலத்துக்கு கனடாவுக்குள் அனுமதி கிடையாது என கனடா பிரதமர் தெரிவித்துள்ளார்.
கனடா, கனேடிய குடிமக்களுக்கு பயணக்கட்டுப்பாடுகளை நெகிழ்த்திவரும் நிலையில், நேற்று பேசிய கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, தடுப்பூசி பெறாத சுற்றுலாப்பயணிகள் கனடாவுக்குள் அனுமதிக்கப்பட கொஞ்சம் காலம் செல்லும் என்று கூறியுள்ளார்.
கடந்த காலத்தில் தியாகங்கள் பல செய்த கனேடியர்களின் பாதுகாப்பை தொடர்ந்து உறுதி செய்யவேண்டியுள்ளது என்று கூறியுள்ள அவர், அதே நேரத்தில், வரும் வாரங்களில் முழுமையாக தடுப்பூசி பெற்ற சுற்றுலாப்பயணிகளை நாட்டுக்குள் அனுமதிக்கும் வகையில் விதிகளில் மாற்றங்கள் வரலாம் என்றார்.
2020 மார்ச் முதல் மூடப்பட்டுள்ள அமெரிக்காவுடனான கனடாவின் எல்லையை திறக்கவும், பயணக் கட்டுப்பாடுகளை நெகிழ்த்தவும் சுற்றுலாத்துறையினர் தொடர்ந்து அரசை வலியுறுத்தி வருகிறார்கள்.
ஆனால், கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக கடந்த காலத்தில் பட்ட கஷ்டத்தை தனது அரசு வீணாக்க விரும்பவில்லை என்று கூறியுள்ளார் ட்ரூடோ.