உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்கா மற்றும் ரஷியா ஒப்புதல்
உக்ரைன் போர் முடிவுக்கு வரவேண்டும் என அமெரிக்க மற்றும் ரஷிய நாடுகளின் தலைவர்கள் பேசும்போது ஒப்பு கொண்டனர் என வெள்ளை மாளிகை தெரிவித்து உள்ளதாக வெள்ளை மாளிகையின் ஊடக செயலாளர் கரோலின் லெவிட் கூறியுள்ளார்.
நீண்டகால அமைதியுடன் இந்த போர் முடிவுக்கு வருவதற்கான தேவை பற்றி தலைவர்கள் இருவரும் பேசி ஒப்பு கொண்டதுடன், அமெரிக்கா மற்றும் ரஷியா ஆகிய இரு நாடுகளின் இருதரப்பு உறவுகள் மேம்படுவதற்கான தேவை பற்றியும் வலியுறுத்தினர்.
இதேபோன்று ரஷியா மற்றும் உக்ரைன் நாடுகளின் தேவைகள் மற்றும் வேண்டுகோள்களுக்கு ஏற்ப, உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியுடனும் டிரம்ப் பேசினார் என லெவிட் கூறியுள்ளார்.
போரை முடிவுக்கு கொண்டு வரும் முயற்சியில் புதிதாக ஜனாதிபதியாக பதவியேற்ற டிரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசு ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில், அமெரிக்காவின் வெள்ளை மாளிகையின் ஊடக செயலாளர் கரோலின் லெவிட் செய்தியாளர்களிடம் கூறும்போது,
அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் மற்றும் ரஷிய அதிபர் புதின் இருவரும் பேசி கொண்டனர். அப்போது, உக்ரைன் போரில் அமைதி மற்றும் போர்நிறுத்த ஒப்பந்தம் ஏற்படுவதற்கான தேவை பற்றி பேசி கொண்டனர்.
போரில் செலவிட்ட தொகையை மக்களின் தேவைக்கு சிறப்பாக பயன்படுத்தி இருக்கலாம் என்றும் டிரம்ப் தொடர்ந்து கூறி வருகிறார் என்றார்.
எரிசக்தி உட்கட்டமைப்புகளின் மீது நடத்தப்படும் தாக்குதல்கள் தற்காலிக அடிப்படையில் நிறுத்தப்படும் என கூறி, அதற்கான உத்தரவை புதின் பிறப்பித்து உள்ளார் என தெரிவிக்கப்பட்ட நிலையில், இரவில் ரஷியா மற்றும் உக்ரைன் நாடுகள் வான்வழி தாக்குதல்களில் ஈடுபட்டன.
எனினும், ஒரு விரிவான போர்நிறுத்த ஒப்பந்தம் அவசியம் என அமெரிக்கா கூறியதும், இந்த தாக்குதல்களை ரஷியா நிறுத்தியது என சி.என்.என். வெளியிட்ட செய்தி தெரிவிக்கின்றது.