ஆயிரக்கணக்கான பணியாளர்களை விடுமுறையில் அனுப்ப அமெரிக்கா தீர்மானம்
சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க நிறுவனத்தின் ஆயிரக்கணக்கான பணியாளர்கள் எதிர்வரும் வெள்ளிக்கிழமை இரவு முதல் விடுமுறையில் அனுப்பப்படும் தீர்மானத்தில் மாற்றமில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க நிறுவனம் விடுத்துள்ள புதுப்பிக்கப்பட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, அத்தியாவசியமான செயற்பாடுகள், தலைமைத்துவ மற்றும் விசேட திட்டங்கள் தவிர்ந்து ஏனைய அனைத்து நேரடி பணியாளர்களும் இந்த வார இறுதியில் விடுமுறையில் அனுப்பப்படவுள்ளனர்.
டொனால்ட் ட்ரம்ப் அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்றதைத் தொடர்ந்து அரசாங்க நிதியுதவி திட்டங்கள் நிறுத்தப்பட்டன. இதனையடுத்து சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க நிறுவனம் இந்த அறிவிப்பை விடுத்துள்ளது.
குறித்த நிறுவனத்தை மூடுவதற்கான தீர்மானம் உலகளாவிய ரீதியில் உள்ள மனிதாபிமான உதவித் திட்டங்களில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என பலர் கருத்து வெளியிட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், அமெரிக்காவிற்கு வெளியே பணியமர்த்தப்பட்ட பல பணியாளர்கள் நாடு திரும்புவதற்கான நடவடிக்கைகளை வெளிவிவகார அமைச்சுடன் இணைந்து முன்னெடுத்து வருவதாக சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க நிறுவனம் தெரிவித்துள்ளது.