3 வயதில் கின்னஸ் சாதனை படைத்த அமெரிக்க சிறுமி
அமெரிக்காவின் ஐடஹோ மாகாணத்தைச் சேர்ந்த 3 வயது சிறுமி ஒருவர் தனது தந்தையுடன் இணைந்து ஹூலா ஹூப் சவாலில் கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளார்.
டேவிட் ரஷ் மற்றும் ஜெனிபர் ரஷ் தம்பதியரின் மகளான பெலிசிட்டி ரஷ், தனது தந்தையும் சகோதரர்களும் கின்னஸ் உலக சாதனைகளைப் படைத்ததைப் பார்த்து, தானும் சாதனை படைக்க வேண்டும் என விருப்பம் தெரிவித்துள்ளார்.

தனது தந்தை ஹூலா ஹூப் வளையத்துடன் பயிற்சி செய்வதைப் பார்த்து ஆர்வம் கொண்ட பெலிசிட்டி, அவருடன் இணைந்து பயிற்சி மேற்கொண்டுள்ளார்.
பெலிசிட்டியின் ஆர்வத்தை கருத்திற்கொண்டு, அவர் விரும்பும் நேரங்களில் மட்டுமே பயிற்சி அளித்ததாக அவரது தந்தை தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், கடந்த 29ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட கின்னஸ் உலக சாதனை முயற்சியில், தனது தந்தையுடன் இணைந்து 30 விநாடிகளில் பின்னோக்கிச் சுழற்றப்பட்ட ஹூலா ஹூப் வளையத்துக்குள் 9 முறை நுழைந்து வெளியேறி பெலிசிட்டி சாதனை படைத்துள்ளார்.
இதற்கு முன்னர் இந்தியாவைச் சேர்ந்த கோகுல்நாத் என்பவர் தனது மகனுடன் இணைந்து 30 விநாடிகளில் 8 முறை ஹூலா ஹூப் வளையத்துக்குள் நுழைந்து வெளியேறியதே சாதனையாக இருந்தது.
இந்தச் சாதனையை முறியடித்த பெலிசிட்டியின் காணொளி சமூக வலைத்தளங்களில் கவனம் பெற்றுள்ளதுடன், அவரது சாதனையை அங்கீகரிக்கும் வகையில் கின்னஸ் உலக சாதனைச் சான்றிதழும் வழங்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.