அமெரிக்காவின் முக்கிய நகரங்களில் விமான சேவைகள் பாதிப்பு
அமெரிக்காவின் முக்கிய நகரங்களில் விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்தநிலையில், பத்து வெவ்வேறு விமான நிலையங்களில் கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் வரை பயணத் தாமதங்கள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மூன்றாவது வாரமாகத் தொடரும் அமெரிக்க அரசாங்கத்தின் முடக்கம்தான் இதற்கு காரணம் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. குறித்த விடயத்தை மத்திய விமானப் போக்குவரத்து நிர்வாகம் குறிப்பிட்டுள்ளது.

அரசாங்க முடக்கம் தொடர்வதால் சுமார் 13,000 விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு அதிகாரிகளும் மற்றும் கிட்டத்தட்ட 50,000 போக்குவரத்துப் பாதுகாப்பு அதிகாரிகளும் சம்பளமின்றி வேலைசெய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அடுத்த வாரம் அந்த அதிகாரிகளுக்கு முழுச் சம்பளம் கிடைக்காது எனவும் குறிப்பிடப்படுகின்றது. வார இறுதியில் இன்னும் அதிகமானோர் வேலைக்கு வராமல் போகலாம் என்று அஞ்சப்படுகின்றது.
விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டில் ஏற்பட்டிருக்கும் பிரச்சினைகளுக்குக் குடியரசுக் கட்சியும் மற்றும் ஜனநாயகக் கட்சியும் ஒன்றையொன்று விமர்சித்து வருகின்றன.
இந்தநிலையில், தொழிற்சங்கங்களும் விமான நிறுவனங்களும் பிரச்சினைக்கு விரைவில் தீர்வுகாணும்படிக் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.