H-1B விசா கட்டணத்தை உயர்த்த அமெரிக்கா நடவடிக்கை!
புதிய H-1B விசாக்களுக்கு 103,265 அமெரிக்க டொலர் கட்டணம் விதிக்கும் வகையில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகம் புதிய விதிமுறையை முன்மொழிந்துள்ளது.
முன்னதாக தற்காலிகமாக நடைமுறைப்படுத்தப்பட்ட இந்தக் கட்டணம், நீதிமன்ற நடவடிக்கைகள் காரணமாக தற்போது வசூலிக்க முடியாத நிலையில் உள்ளது.

செப்டெம்பர் மாதத்தில் நிறைவடையவுள்ள கட்டண நடைமுறை
H-1B விசா தற்காலிக கட்டண நடைமுறை செப்டெம்பர் மாதத்தில் நிறைவடையவுள்ள நிலையில், அதனை நிரந்தரமாக்கும் நோக்கில் அமெரிக்க உள்நாட்டுப் பாதுகாப்புத் திணைக்களம் இந்த புதிய விதிமுறையை முன்வைத்துள்ளது.
புதிய கட்டணம் நடைமுறைக்கு வந்தால், தொழில்நுட்பம், கல்வி மற்றும் ஆராய்ச்சி உள்ளிட்ட துறைகளில் வெளிநாட்டு பணியாளர்களை நியமிக்கும் அமெரிக்க நிறுவனங்களின் செலவுகள் கணிசமாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எனினும், அமெரிக்காவில் ஏற்கனவே மாணவர் விசாவில் தங்கியிருப்பவர்களுக்கு வழங்கப்படும் H-1B விசாக்களுக்கும், ஏற்கனவே உள்ள விசாக்களைப் புதுப்பிப்பதற்கும் இந்தக் கட்டணம் பொருந்தாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தக் கட்டணத்தை எதிர்த்து அமெரிக்க வர்த்தக அமைப்புகள், சில மாநில அரசுகள் மற்றும் தொழிற்சங்கங்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் நீதிமன்றங்களில் வழக்குத் தொடர்ந்துள்ளனர்.
இந்தநிலையில், H-1B திட்டத்தின் கீழ் ஆண்டுதோறும் 65,000 விசாக்களும், உயர் கல்வித் தகுதி பெற்றவர்களுக்கு கூடுதலாக 20,000 விசாக்களும் வழங்கப்படுகின்றன.
கடந்த ஆண்டு H-1B விசாக்களுக்காக அமெரிக்க நிறுவனங்கள் சுமார் 344,000 விண்ணப்பங்களைப் பதிவு செய்திருந்ததாக அமெரிக்க குடியகல்வு மற்றும் குடிவரவு சேவைத் தரவுகள் தெரிவிக்கின்றன.
இது 2024ஆம் ஆண்டை விட 25 சதவீதத்துக்கும் அதிகமான வீழ்ச்சியாகும். மேலும், H-1B விண்ணப்பதாரர்களுக்கான விசாரணை மற்றும் பின்னணி சரிபார்ப்பு நடவடிக்கைகளை அமெரிக்க நிர்வாகம் கடுமையாக்கியுள்ளது.
அத்துடன், அதிக திறன் கொண்ட மற்றும் அதிக ஊதியம் பெறும் பணியாளர்களுக்கு முன்னுரிமை வழங்கும் புதிய விசா தேர்வு முறையையும் முன்மொழிந்துள்ளதாக கூறப்படுகின்றது