அமெரிக்கா அணுகுமுறையை மாற்றினால் பேச்சுவார்த்தைக்குத் தயார்
அமெரிக்கா தனது "விரிவாக்கக் கொள்கை" மற்றும் "மிரட்டல் போக்கை" மாற்றிக்கொண்டால், அந்த நாட்டுடன் ராஜதந்திர ரீதியான பேச்சுவார்த்தைகளை நடத்த ஈரான் தயாராக இருப்பதாக அந்நாட்டின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்சி தெரிவித்துள்ளார்.
அண்மையில் துருக்கி, கத்தார், சவுதி அரேபியா, எகிப்து, ஈராக் மற்றும் அஜர்பைஜான் ஆகிய நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களுடன் அப்பாஸ் அரக்சி தொலைபேசி வாயிலாக ஆலோசனை நடத்தினார். இது குறித்து அவர் தனது அதிகாரப்பூர்வ டெலிகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
அமெரிக்கா தனது ஆதிக்கப் போக்கு, மிரட்டல் பேச்சுக்கள் மற்றும் தூண்டுதல் நடவடிக்கைகளைக் கைவிட்டால் மட்டுமே தூதரக ரீதியான தீர்வுகளுக்கு ஈரான் ஒத்துழைக்கும். ஈரானின் ஆயுதப் படைகள் முழு விழிப்புணர்வுடன் உள்ளன.

நாட்டின் மீதான எந்தவொரு அச்சுறுத்தல் அல்லது ஆக்கிரமிப்பையும் தீர்க்கமாகவும் விரிவாகவும் எதிர்கொள்ளத் தயாராக இருக்கிறோம்.
அண்மைய வாரங்களில் ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், அரக்சியின் இந்த கருத்து முக்கியத்துவம் பெறுகிறது.
குறிப்பாக, பாகிஸ்தானின் இஸ்லாமாபாத்தில் நடைபெற்ற முதற்கட்டப் பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, ஈரான் தனது பிராந்திய நட்பு நாடுகளுடன் ஆலோசனைகளைத் தீவிரப்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் அதீத கோரிக்கைகளே முந்தைய பேச்சுவார்த்தைகள் தோல்வியடையக் காரணம். எங்களின் இறையாண்மையைப் பாதுகாப்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோம், என்று ஈரான் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
மறுபுறம், ஹார்முஸ் ஜலசந்தியில் நிலவும் பதற்றம் மற்றும் சர்வதேச பொருளாதாரத் தடைகள் காரணமாக நிலவும் சூழலைச் சீர்செய்யப் பேச்சுவார்த்தைகளே ஒரே வழி என உலக நாடுகள் வலியுறுத்தி வருகின்றன.