ரஷ்யா - உக்ரைன் அமைதி ஒப்பந்த முயற்சிகளை கைவிட அமெரிக்கா திட்டம்?
ரஷ்யா மற்றும் உக்ரேனின் அமைதி ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றம் ஏற்படாத நிலையில், தாம் வெளியேறவேண்டிய நிலை ஏற்படும் என அமெரிக்கா தெரிவித்துள்ளது.
சமாதானத்தைக் கொண்டு வரும் முயற்சியை நீண்டகாலத்துக்குத் தொடரமுடியாது என அமெரிக்க வெளிவிவகாரத்துறை செயலாளர் மார்க்கோ ரூபியோ எச்சரித்துள்ளார்.
கடந்த 2022 ஆம் ஆண்டு யுக்ரேன் மீது ரஷ்யா முழு அளவிலான ஆக்கிரமிப்பு படையெடுப்பினை ஆரம்பித்த நாள் முதல், சாத்தியமான யுத்த நிறுத்தத்திற்கு ரஷ்யா பல நிபந்தனைகளை விதித்து வருகிறது.
யுக்ரேனின் மறுகட்டமைப்புக்கான முதலீட்டு நிதியினை பெறும் நோக்கில் அமெரிக்காவுடன் ஒரு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவதற்கான முதல் படியை யுக்ரேன் எடுத்த சில மணி நேரங்களுக்குப் பின்னர் வெளிவிவகாரத்துறை செயலாளரின் கருத்துக்கள் வெளிப்பட்டுள்ளன.
அதேவேளை, பாரிசில் ஐரோப்பியத் தலைவர்களுடனான ஒரு சந்திப்பைத் தொடர்ந்து வெளிவிவகாரத்துறை செயலாளர் செய்தியாளர் மத்தியில் உரையாற்றிய போது, சமாதான ஒப்பந்தம் எட்டுவது கடினம் என்பது தெளிவாகியுள்ளது, ஆனால் அது விரைவில் முடிவடையக்கூடிய அறிகுறிகள் தென்பட வேண்டும் எனக் கூறினார்.
அதேவேளை, இன்று யுக்ரேனின் ஜனாதிபதி வொலோடிமீர் செலன்ஸ்கி, தனது X பதிவில் இன்று ரஷ்யாவினால் மேற்கொள்ளப்பட்ட ஏவுகணை தாக்குதலில், இருவர் கொல்லப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், அமெரிக்க முதலீட்டாளர்கள், சுதந்திரமான, இறையாண்மை மற்றும் பாதுகாப்பாக யுக்ரேனுடன் இணைந்து முதலீடு செய்ய விரும்புவதாகத் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.