அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் விடுத்த அழைப்பு ; பாகிஸ்தான் கொடுத்த பதில்
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் அழைப்பை ஏற்று காஸா அமைதி வாரியத்தில் பாகிஸ்தான் இணைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இஸ்ரேலின் தாக்குதல்களில் பாதிக்கப்பட்ட காஸா நகரத்தை நிர்வாகம் செய்வதற்கும் அங்குள்ள மக்களின் மறுவாழ்விற்கும் உலகத் தலைவர்கள் இடம்பெறும் அமைதி வாரியத்தை உருவாக்கும் நடவடிக்கைகளில் அதிபர் ட்ரம்ப் ஈடுபட்டு வருகின்றார்.

காஸா அமைதி வாரியத்தில் இணையுமாறு பல்வேறு நாடுகளின் தலைவர்களுக்கு ஜனாதிபதி ட்ரம்ப் அழைப்பு விடுத்துள்ளார். இதனால், பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷரீஃபிற்கும் அழைப்பு விடுக்கப்பட்டது.
இந்த நிலையில், காஸா அமைதி வாரியத்தில் பாகிஸ்தான் அரசு இணைவதற்கு முடிவு செய்துள்ளதாக, அந்நாட்டு வெளியுறவு அமைச்சகம் அறிவித்துள்ளது.
ஏற்கெனவே, ஐக்கிய அரபு அமீரகம், இஸ்ரேல், மொராக்கோ, வியத்நாம், கஜகஸ்தான், ஹங்கேரி, ஆர்ஜென்டீனா மற்றும் பெலாரஸ் ஆகிய நாடுகள் காஸா அமைதி வாரியத்தில் இணைந்துள்ளன.
இந்த வாரியத்தில் இணைவதற்கு, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. எனவே, பாகிஸ்தான் இடம்பெற்றுள்ள இந்த வாரியத்தில் இணைவது குறித்து இந்திய அரசு இதுவரை எந்தவொரு கருத்தும் தெரிவிக்கவில்லை.
மேலும், பராகுவே, கனடா, எகிப்து, துருக்கி, ரஷியா, ஸ்லோவேனியா, தாய்லாந்து ஆகிய நாடுகளின் தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.