அமெரிக்க ஜனாதிபதி தேர்தல்... யாருக்கு வெற்றி? வெளியான புதிய கருத்துக்கணிப்பு
அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் எஸ்.எஸ்.ஆர்.எஸ். என்ற ஆராய்ச்சி நிறுவனம் சுமார் 2 ஆயிரம் வாக்காளர்களிடம் நடத்திய கருத்துக் கணிப்பின் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.
குறித்த கருத்து கணிப்பு முடிவுகள் கமலா ஹாரிஸ் - டொனால்ட் டிரம்புக்கும் மிக நெருக்கமான போட்டி நிலவுவதையும், அமெரிக்கர்களால் வெற்றியாளரை தெளிவாக தேர்வு செய்ய முடியாத சூழல் நிலவுவதையும் காட்டுகிறது.
இந்த புதிய கருத்துக் கணிப்பின்படி, அமெரிக்காவில் 48 சதவீதம் பேர் கமலா ஹாரிசுக்கு முழு ஆதரவு தெரிவிக்கின்றனர். அதே போல் டிரம்புக்கு 47 சதவீதம் பேர் முழு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
இரண்டு கட்சிகளையும் சாராத பொதுவான வாக்காளர்களில் 45 சதவீதம் பேர் கமலா ஹாரிசுக்கும், 41 சதவீதம் பேர் டிரம்புக்கும் வாக்களிக்க உள்ளதாக கூறியுள்ளனர்.
30 வயதுக்கு குறைவான இளம் வாக்காளர்களில் 55 சதவீதம் பேர் கமலா ஹாரிசுக்கும், 38 சதவீதம் பேர் டிரம்புக்கும் ஆதரவாக உள்ளனர்.
12 சதவீதம் வாக்காளர்கள் இன்னும் தங்களால் ஒரு முடிவை எடுக்க முடியவில்லை என்று தெரிவித்துள்ளனர்.