இஸ்ரேலுக்கு அவசர அவசரமாக சென்ற அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர்!
இஸ்ரேல் நாட்டிற்கு அவரச அவரசமாக அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஆன்டனி பிளிங்கன் இன்றையதினம் (22-03-2024) சென்றுள்ளார்.
காசாவின் தெற்குப் பகுதியான ராபா நோக்கி தனது போர் நடவடிக்கைகளை விரிவுபடுத்தும் இஸ்ரேலின் முடிவில் கருத்து வேறுபாடு கொண்டுள்ள அமெரிக்கா அதற்கான மாற்று வழிகளை முன்வைக்கவுள்ளது.
ஹாமஸ் உடன் போர் தொடங்கியதில் இருந்து 6 வது முறையாக இஸ்ரேல் விஜயம் மேற்கொண்டுள்ள வெளியுறவுத் துறை அமைச்சர், பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவைச் சந்தித்து உரையாடவுள்ளார்.
முன்னதாக மத்திய கிழக்கு நாடுகளின் வெளியுறவுத் துறை அதிகாரிகளுடன் உரையாடிய வெளியுறவுத் துறை அமைச்சர், “ராபாவில் இஸ்ரேல் மிகப்பெரும் இராணுவ நடவடிக்கை மேற்கொள்வது தவறானது, நாங்கள் அதற்கு ஆதரவு அளிக்க போவதில்லை.
ஹமாஸ் அமைப்புடன் போர் புரிய இந்த நடவடிக்கை அவசியமும் இல்லை” எனத் தெரிவித்தார்.
ராபாவில் ஹமாஸை எதிர்கொள்ள மாற்று ஏற்பாடுகள் தொடர்பில் வெளியுறவுத் துறை அமைச்சர் பிளிங்கன் பேசவுள்ளார்.
இதன் தொடர்ச்சியாக அடுத்த வாரம் இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் யோவ் காலண்ட் உள்ளிட்ட உயர்மட்ட குழுவினர் வாஷிங்க்டன் செல்லவுள்ளனர்.
நெருங்கிய நட்பு நாடுகளான அமெரிக்கா - இஸ்ரேல் இடையேயான உறவில் கருத்து வேறுபாடுகளால் விரிசல் ஏற்பட்டு வருகிற சூழல் நிலவுகிறது.
இந்த நிலையில் போர் நிறுத்தம் மற்றும் கைதிகள் விடுதலை குறித்த அமெரிக்கா விடுத்துள்ள ஐ.நா தீர்மானம் இன்று வாக்கெடுப்புக்கு வருவது குறிப்பிடத்தக்கது..