அமெரிக்காவை தாக்கும் மாபெரும் குளிர்கால புயல்
அமெரிக்காவின் கிழக்கு மாநிலங்களை முடக்கக்கூடிய அளவிலான மாபெரும் குளிர்கால புயல் தாக்கத்தை ஏற்படுத்தும் நிலையில், டெக்சாஸ் வரை உள்ள பகுதிகளில் 5 லட்சத்துக்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் மின்சார வசதி இன்றி தவித்து வருகின்றனர்.
இதேவேளை, ஞாயிற்றுக்கிழமை மட்டும் 9,600க்கும் அதிகமான விமானங்கள் ரத்து செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
பனி, உறைமழை, ஐஸ் மழை மற்றும் மிக ஆபத்தான அளவிலான கடும் குளிர், ஞாயிற்றுக்கிழமை தொடங்கி வாரம் முழுவதும் அமெரிக்காவின் கிழக்கு மூன்றில் இரண்டு பகுதிகளை தாக்கும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.

அவசர கால நிலை
இந்த புயல்களை “வரலாற்றுச் சிறப்புமிக்கவை” எனக் குறிப்பிட்ட அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், தென் கரோலினா, விர்ஜீனியா, டென்னஸி, ஜார்ஜியா, நார்த் கரோலினா, மேரிலாண்ட், ஆர்கன்சாஸ், கென்டக்கி, லூயிஸியானா, மிசிசிப்பி, இந்தியானா மற்றும் வெஸ்ட் விர்ஜீனியா ஆகிய மாநிலங்களில் அவசர பேரிடர் அறிவிப்புகளை சனிக்கிழமை அனுமதித்தார்.
“இந்த புயல் செல்லும் பாதையில் உள்ள அனைத்து மாநிலங்களுடனும் தொடர்ந்து தொடர்பில் இருப்போம். அனைவரும் பாதுகாப்பாகவும், சூடாகவும் இருங்கள்,” என்று டிரம்ப் தனது ‘ட்ரூத் சோஷியல்’ தளத்தில் பதிவிட்டார்.
உள்நாட்டு பாதுகாப்பு துறை (DHS) தகவலின்படி, 17 மாநிலங்களும் வாஷிங்டன் டி.சி.யும் வானிலை அவசரநிலையை அறிவித்துள்ளன.
மக்களை மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. மிகவும் கடும் குளிர் நிலவப்போகிறது.
எரிபொருள், உணவுப் பொருட்களை முன்கூட்டியே சேமித்து வைத்துக்கொள்ளுங்கள். நாம் அனைவரும் ஒன்றாக இதை எதிர்கொள்வோம்,” என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.