டிரம்பின் மற்றொரு அதிரடி வரி : கலக்கத்தில் ஹாலிவுட்
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், வெளிநாடுகளில் தயாரிக்கப்படும் அனைத்து திரைப்படங்களுக்கும் 100% வரி விதிக்க உள்ளதாக அறிவித்துள்ளார்.
இதுவரை இல்லாத வகையில் எடுக்கப்பட்ட இந்த தீர்மானம், ஹாலிவுட்டின் உலகளாவிய வணிக மாதிரியை முற்றிலும் மாற்றக்கூடும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
எங்கள் திரைப்படத் துறை பிற நாடுகளால் திருடப்பட்டுவிட்டது; குழந்தையிடமிருந்து மிட்டாய் பறிப்பது போல எளிதாக, என டிரம்ப் தனது ட்ரூத் சமூக ஊகடப் பதிவில், குற்றம்சாட்டியுள்ளார்.
இந்த அறிவிப்புக்குப் பின், நெட்பிலிக்ஸின் பங்குகள் 1.5% வீழ்ச்சியை பதிவு செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த மே மாதம் இவ்வாறு திரைப்படங்களுக்கு வரி விதிக்கும் திட்டம் குறித்து முதன்முதலாக அறிவித்திருந்தார்.
ஆனால் எந்த நாடுகளுக்கு இந்த வரி பொருந்தும், எவ்வாறு செயல்படுத்தப்படும் என்பதில் அவர் இதுவரை தெளிவாக வெளிப்படுத்தவில்லை.
திரைப்படங்கள் ஒரு புலமைச் சொத்து (Intellectual Property) ஆகும்; அவை சேவைத் துறையின் சர்வதேச வர்த்தகத்தின் ஒரு பகுதியாகும். அமெரிக்கா இத்துறையில் அதிக வருவாய் ஈட்டுகிறது என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
எனவே, இப்படியான வரிக்கு சட்ட அடிப்படை இல்லை என அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
மேலும், இன்றைய ஹாலிவுட் படங்கள் பல நாடுகளில் தயாரிப்பு, நிதியுதவி, தொழில்நுட்ப வேலைகள், பார்வை விளைவுகள் ஆகியவற்றை ஒருங்கிணைத்து உருவாகின்றன.
இதனால் ஒரு படம் முழுமையாக “வெளிநாட்டு தயாரிப்பு” என வகைப்படுத்தப்படுவது சிக்கலானது என ஸ்டூடியோ நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
வெளிநாட்டு ஸ்டூடியோக்களுடன் கூட்டு தயாரிப்புகள் அதிகரித்து வரும் நிலையில், அப்படங்களுக்கு இந்த வரி விதிக்கப்படுமா என்பதில் பெரும் குழப்பம் நிலவுவதாக திரைத்துறையினர் தெரிவித்துள்ளனர்.