சில கனடிய நிறுவனங்கள் மீது அமெரிக்கா நிதித்தடை விதிப்பு!
ஈரான் அரசுக்கு விதிக்கப்பட்ட சர்வதேச பொருளாதாரத் தடைகளை மீற உதவியதாகக்கூறி, கனடாவைச் சேர்ந்த 8 வணிக நிறுவனங்கள் மீது அமெரிக்க நிதித்துறை கடுமையான பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது.
கனடாவின் பணமோசடி தடுப்பு அமைப்பான 'ஃபின்ட்ராக்' நிறுவனத்துடன் இணைந்து, பிரிட்டிஷ் கொலம்பியா மற்றும் ஒன்டாரியோ ஆகிய மாகாணங்களில் இயங்கி வந்த பணப் பரிவர்த்தனை சேவை நிறுவனங்கள் மீது இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தற்போது அமெரிக்காவின் தடைகளுக்கு உள்ளாகியுள்ள நிறுவனங்களில் சில, முன்னாள் கனடிய ஒலிம்பிக் பனிச்சறுக்கு வீரரும், சர்வதேச போதைப்பொருள் கடத்தல் கும்பலின் முக்கிய தலைவருமான ரியான் வெடிங் என்பவருடன் இணைந்து செயல்பட்டதாகவும் அமெரிக்க நிதித்துறை குற்றம் சாட்டியுள்ளது.

மில்லியன் எக்ஸ்சேஞ்ச், என்.ஐ.ஏ நேஷன்ஸ் கரன்சி, ஃபரா எக்ஸ்சேஞ்ச், தர்விஷ் எக்ஸ்சேஞ்ச் மற்றும் சில குறிப்பிட்ட பதிவு எண்களைக் கொண்ட நிறுவனங்கள் மீது இந்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஜனவரி மாதம் ரியான் வெடிங் கைது செய்யப்படுவதற்கு முன்பாக, போதைப்பொருள் கடத்தல் மூலம் கிடைத்த மில்லியன் கணக்கான டாலர்களை டிஜிட்டல் சொத்துக்கள் மூலம் கைமாற்றி, பணமோசடி செய்ய இந் நிறுவனங்களைப் பயன்படுத்தியதாகக் கூறப்படுகிறது.
இதேவேளை, ரியான் வெடிங்கின் வலது கரமாகச் செயல்பட்ட கனடியரான ஆண்ட்ரூ கிளார்க் என்பவருக்கு ஜாமீன் வழங்வதற்காக 2 மில்லியன் டாலர் லஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில், மெக்சிகோ கூட்டாட்சி நீதிபதி லுயிஸ் பெனிடெஸ் அல்காண்டரா என்பவரை அமெரிக்க நீதித்துறை இந்த வாரம் கைது செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.