அமெரிக்கப் படையினர் சொல்லாமல் வெளியேறினர்: ஆப்கான் இராணுவ ஜெனரல்

Sulokshi
Report this article
ஆப்கானிஸ்தானில் அமெரிக்காவின் மிகப் பெரிய படைத்தளமாக விளங்கிய பக்ரம் படைத்தளத்திலிருந்த அமெரிக்கப் படையினர், சொல்லாமல் கொள்ளாமல் இரவு நேரத்தில் வெளியேறிவிட்டனர் என ஆப்கான் இராணுவ அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் அங்கிருந்து வெளியேறும் நேரத்தை துல்லியமாக அமெரிக்கப் படையினர் தெரிவித்திருக்கவில்லை என பெண்டகனும் உறுதிப்படுத்தியுள்ளது.
ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்கப் படைகளை வாபஸ் பெறுவதற்காக அமெரிக்காவுக்கும் தலிபான்களுக்கும் இடையில் ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தத்தையடுத்து ஆப்கானிலிருந்து அமெரிக்கப் படைகள் வெளியேறி வருகின்றன.
அதேவேளை, ஆப்கானிஸ்தான் படையினர் மீது தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ள தலிபான்கள், பல நகரங்களை தம்வசப்படுத்தியுள்ளனர். 2001 ஆம் ஆண்டில் தலிபான்களின் கட்டுப்பாட்டிலிருந்த ஆப்கான் மீதான அமெரிக்கப் படையெடுப்பையடுத்து, ஆப்கானில் அமெரிக்காவின் மிகப் பெரிய படைத்தளமாக பக்ரம் விமானப்படைத்தளம் விளங்கியது.
கடந்த 2ஆம் திகதி அமெரிக்கப்படையினர் அத்தளத்திலிருந்து வெளியேறறினர். இது தொடர்பாக பக்கரம் தளத்தில் புதிய தளபதியான ஆப்கான் இராணுவ அதிகாரி ஜெனரல் அசாதுல்லா கோஹிஸ்தானி பிபிசியிடம் கூறுகையில்,
உள்ளூர் நேரப்படி வெள்ளிக்கிழமை அதிகாலை 03.00 மணியளவில் பக்ரம் தளத்திலிருந்து அமெரிக்கப் படையினர் வெளியேறினர் எனவும் ஒரு மணித்தியாலத்தின் பின்னர் இது குறித்து ஆப்கான் இராணுவம் அறிந்துகொண்டது எனவும் தெரிவித்துள்ளார்.
பக்ரம் தளத்தில் சிறைச்சாiயொன்றும் உள்ளது சுமார் 5,000 தலிபான் கைதிகளையும் அச்சிறையில் அமெரிக்கப் படையினர் விட்டுச் சென்றுள்ளனர். இந்நிலையில் பக்ரம் தளத்தை தலிபான்கள் தாக்கக்கூடும் என ஆப்கான் படையினர் எதிர்பார்ப்பதாக ஜெனரல் கோஹிஸ்தானி தெரிவித்துள்ளார். ‘அமெரிக்கர்களுடன் எம்மை ஒப்பிட்டால் அது பெரிய வித்தியாமாக இருக்கும்.
ஆனால், அனைத்து மக்களையும் பாதுகாப்பதற்கு எமது ஆற்றல்களுக்கு ஏற்ப எம்மால் இயன்ற அனைத்தையும் செய்வோம்’ எனவும் அவர் கூறியுள்ளார். பல்லாயிரக்கணக்கான போத்தல் தண்ணீர், இராணுவ துரித உணவுகள், ஆயிரக்கணக்கான சிவில் வாகன்கள், நூற்றுக்கணக்கான இராணுவ வாகனங்களையும் அமெரிக்கப்படையினர் பக்ரம் தளத்தில் விட்டுச் சென்றுள்ளதாகவும் செய்தி வெளியாகியுள்ளது.
இதேவேளை, பக்ரம் விமானப்படைத் தளத்திலிருந்து அமெரிக்கப் படையினர் வெளியேறுவது குறித்து 2 நாட்களுக்கு முன்னர் ஆப்கான் அரசியல், இராணுவ அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டதாக அமெரிக்க இராணுவத் தலைமையகமான பெண்டகனின் பேச்சாளர் ஜோன் கேர்பி தெரிவித்துள்ளார்.
எனினும், அமெரிக்கப் படையினர் வெளியேறும் துல்லியமான நேரமானது செயற்பாட்டு பாதுகாப்புக் காரணங்களுக்காக வெளிப்படுத்தப்படவில்லை எனவும் செய்தியாளர்களிடம் பேசுகையில் அவர் தெரிவித்தார்.