அமெரிக்காவின் அவசர எச்சரிக்கை ; பொதுமக்களை குறிவைத்து ஹமாஸ் தாக்குதல் திட்டம்?
காசாவில் பொதுமக்களைக் குறிவைத்துத் தாக்குதல் நடத்த ஹமாஸ் திட்டமிட்டுள்ளதாக நம்பகமான தகவல்கள் கிடைத்துள்ளதாக அமெரிக்க இராஜாங்க திணைக்களம் தெரிவித்துள்ளது.
இராஜாங்க திணைக்களத்தினால் வெளியிடப்பட்ட அறிக்கையில், இது யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை மீறும் செயல் எனவும் குறிப்பிட்டுள்ளது.
இந்த திட்டமிடப்பட்ட தாக்குதல், மிகுந்த சிரமத்திற்கு மத்தியில் மத்தியஸ்தர்களால் எட்டப்பட்டுள்ள குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைப் பாதிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தாக்குதல் குறித்து ராஜாங்க அமைச்சினால் வெளியிடப்பட்ட அறிக்கையில் மேலதிக விபரங்கள் வெளியிடப்படவில்லை. ஹமாஸ் மற்றும் இஸ்ரேலுக்கு இடையேயான யுத்த நிறுத்த ஒப்பந்தத்தின் முதல் கட்டம் தற்போது செயல்பட்டு வருகின்றது.
உயிருடன் உள்ள அனைத்துப் பணயக்கைதிகளும் விடுவிக்கப்பட்டுள்ளதுடன், மரணமானவர்களின் உடலங்கள் இஸ்ரேலுக்கு அனுப்பி வைக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தவிர ஒப்பந்தத்தின் முக்கிய பகுதியாக இஸ்ரேல், தனது சிறைகளில் உள்ள 250 பாலஸ்தீனிய கைதிகளை விடுவித்துள்ள நிலையில் காசாவில் இருந்து 1,718 கைதிகளும் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
இந்த விடயம் தொடர்பாக மத்தியஸ்தர்களான எகிப்து, கட்டார் மற்றும் துருக்கி ஆகியோருக்கு அறிவித்துள்ளதாகத் தெரிவிக்கும் அமெரிக்கா, யுத்த நிறுத்த நிபந்தனைகளை நிலைநாட்ட வேண்டிய அவசியம் குறித்தும் வலியுறுத்தப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஹமாஸ் குறிப்பிட்ட இந்தத் தாக்குதலை மேற்கொண்டால், காசா மக்களைப் பாதுகாக்கவும், யுத்த நிறுத்தத்தினைப் பேணுவதற்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்த அறிக்கை குறித்து ஹமாஸ் இதுவரை எந்தக் கருத்தினையும் வெளியிடவில்லை.