தடுப்பூசியுடன் ரொறன்ரோ தெருக்களில்... புதிய முயற்சிக்கு குவியும் ஆதரவு
தடுப்பூசியுடன் பொதுமக்களை நாடிச் செல்லும் ரொறன்ரோ செவிலியர்களின் புதிய திட்டத்திற்கு ஆதரவு குவிந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
ரொறன்ரோவின் மைக்கேல் கரோன் மருத்துவமனை செவிலியர்கள் பத்துக்கும் மேற்பட்டவர்கள் இந்த புதிய திட்டத்துடன் களமிறங்கியுள்ளனர்.
ஒவ்வொரு நாளும் 20 முதல் 30 டோஸ் தடுப்பூசி வரை தகுதியான நபர்களுக்கு அளித்து வருவதாக செவிலியர்கள் தெரிவிக்கின்றனர். மட்டுமின்றி, தடுப்பூசி பெறும் ஒவ்வொரு நபரும் தங்கள் குடும்பத்தினரையும் அன்புக்குரியவர்களையும் பாதுகாப்பாக வைத்திருக்கிறார்கள் என இந்த திட்டத்தின் மூலம் மக்களுக்கு உணர்த்துவதாக செவிலியர்கள் தரப்பு குறிப்பிட்டுள்ளது.
நாடு முழுவதும் நான்காவது அலை ஏற்பட கூடும் என்ற அச்சத்தில் இருக்கும் நிலையில், கடந்த 2 வாரங்களுக்கு முன்னர் தெருக்கள் தோறும் சென்று தடுப்பூசி அளிக்கும் திட்டத்தை மைக்கேல் கரோன் மருத்துவமனை செவிலியர்கள் குழு துவங்கியுள்ளது.
மட்டுமின்றி ஒன்ராறியோவில் தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்களில் பெரும்பாலானவர்கள் கொரோனாவால் பாதிப்புக்கு உள்ளாகும் நிலையும் அதிகரித்து வருகிறது.
தற்போது தெருக்களில் சென்று தடுப்பூசி அளிப்பதால், தடுப்பூசி போட்டுக்கொள்ள தயக்கம் காட்டிவருபவர்களும், வேலை காரணமாக தடுப்பூசி மையங்களுக்கு செல்ல முடியாதவர்களும் தடுப்பூசி போட்டுக்கொள்ள இதனால் முடியும் என கூறுகின்றனர்.