வெனிசுலா - அமெரிக்கா மோதல் ;ஆசியாவிற்கான எண்ணெய் சந்தையை விரிவுபடுத்தும் கனடா!
ஆசியாவிற்கான எண்ணெய் சந்தையை விரிவுபடுத்தக் கனடா பணியாற்றி வருவதாகப் கனேடிய பிரதமர் மார்க் கார்னி அறிவித்துள்ளார்.
அதன்படி பசுபிக் கடற்கரைக்கு செல்லும் எண்ணெய் குழாய் திட்டத்திற்குஉடனடியாக ஒப்புதல் அளிக்குமாறு பிரதமர் கார்னிக்கு எழுதிய கடிதத்தில் எதிர்க்கட்சித் தலைவர் பெய்ரே பொய்லிவ்ரே வலியுறுத்தியுள்ளார்.

உக்ரைன் தொடர்பான பேச்சுவார்த்தைகளுக்காக பாரிஸில் தங்கியிருந்த கார்னியிடம், வெனிசுவேலாவின் எண்ணெய் துறையை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர விரும்புவது தொடர்பாகவும், அதனால் பி.சி கடற்கரைக்கான குழாய் திட்டத்தின் அவசியம் குறித்தும் கேட்கப்பட்டது.
ஆல்பர்ட்டா அரசாங்கத்துடன் மேற்கொள்ளப்பட்ட விரிவான புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, புதிய எண்ணெய் குழாய் திட்டம் மற்றும் சந்தை விரிவாக்கம் ஆகியவற்றில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளதாகப் கனேடிய பிரதமர் கார்னி பதிலளித்துள்ளார்.
வெனிசுவேலாவில் நடக்கும் நிகழ்வுகள், பசுபிக் கடற்கரைக்கான புதிய எண்ணெய் குழாய் திட்டத்தை விரைவுபடுத்த வேண்டியதன் அவசியத்தை அடிக்கோடிட்டுக் காட்டுவதாக ஆல்பர்ட்டா மாகாண முதல்வர் டேனியல் ஸ்மித் தெரிவித்துள்ளார்.
இந்தத் திட்டத்திற்கான விண்ணப்பத்தை சமர்ப்பிக்க மாகாண அரசு தயாராகி வருவதாகவும், மத்திய அரசாங்கம் இதில் அவசரமாகச் செயல்படும் என எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதேசமயம் 60 நாட்களுக்குள் அந்த திட்ட முன்மொழிவை அங்கீகரிக்க உறுதியளிக்குமாறு பழமைவாதிகள் அரசாங்கத்தை கேட்டுக்கொள்வதாக பொய்லிவ்ரே தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாக தெரிவிக்கபப்டுகின்றது.