கனடா சிறைகளில் அதிகரிக்கும் வன்முறை
கனடா சிறைகளில் கைதிகளின் வன்முறைச் சம்பவங்கள், கடத்தல் பொருட்கள் மற்றும் ட்ரோன் நடமாட்டங்கள் கவலை அளிக்கும் வகையில் அதிகரித்து வருவதாக கனடா சிறைத்துறை அதிகாரிகள் தொழிற்சங்கத்தின் பிராந்தியத் தலைவர் ரெனே ஹோவ் தெரிவித்துள்ளார்.
சிறைத்துறை அதிகாரிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய நிர்வாகம் போதிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
அண்மையில் நோவா ஸ்கோஷியாவில் உள்ள ஸ்பிரிங்ஹில் சிறைச்சாலையில் நடந்த பயங்கர வன்முறையில் ஐந்து சிறைத்துறை அதிகாரிகள் படுகாயமடைந்தனர். அதிகாரிகளில் இரண்டு பேர் கத்தியால் குத்தப்பட்டனர்.

ஒருவருடைய காது பாதியளவு கடித்துக் குதறப்பட்டுள்ளது. இது போன்ற வன்முறைகள் நடக்கக்கூடும் என முன்னரே எச்சரித்தும், அதிகாரிகள் அதை கண்டுகொள்ளவில்லை" என ரெனே ஹோவ் ஆதங்கத்துடன் தெரிவித்துள்ளார்.
இந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல், அட்லாண்டிக் பிராந்தியத்தில் உள்ள 5 மத்திய சிறைகளில் பதிவான வன்முறைச் சம்பவங்களின் விவரங்களை தொழிற்சங்கம் வெளியிட்டுள்ளது.
தாக்கப்பட்ட அதிகாரிகள்: 31 பேர் , மிரட்டலுக்குள்ளான அதிகாரிகள்: 79 பேர், கைதிகளுக்குள் நடந்த மோதல்கள்: 68, பறிமுதல் செய்யப்பட்ட ஆயுதங்கள்: 337, பறிமுதல் செய்யப்பட்ட மொபைல் போன்கள்: 65, கண்டறியப்பட்ட ட்ரோன் நடமாட்டங்கள்: 20 என பட்டியலிடப்பட்டுள்ளது.
எங்கள் ஊழியர்கள் இதற்கு முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு வன்முறையை எதிர்கொள்கிறார்கள். இது ஏதோ ஒரு குறிப்பிட்ட பகுதி சார்ந்த பிரச்சனை அல்ல; இது ஒட்டுமொத்த நாட்டின் பாதுகாப்புப் பிரச்சனை என தெரிவித்துள்ளார்.