சட்டங்களை மீறினால் விசா ரத்தாகும் ; மாணவா்களுக்கு அமெரிக்க தூதரகம் எச்சரிக்கை
‘அமெரிக்காவில் தங்கியிருக்கும்போது சட்டங்களை மீறினால், நுழைவு இசைவு (விசா) ரத்து செய்யப்படும்’ என்று மாணவா்களுக்கு இந்தியாவிலுள்ள அமெரிக்க தூதரகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
அமெரிக்காவில் உயா்கல்வி கற்க செல்லும் இந்திய மாணவா்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் சூழலில், அந்நாட்டின் சட்டவிதிகளை முறையாக பின்பற்ற வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தும் வகையில் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக அமெரிக்க தூதரகம் தனது அதிகாரபூா்வ ‘எக்ஸ்’ சமூக ஊடகப் பக்கத்தில் புதன்கிழமை வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது: அமெரிக்காவில் மாணவா்கள் தங்கியிருக்கும்போது சட்டங்களை மீறுவது, விசாவுக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்.

மாணவா்கள் ஏதேனும் சட்டவிரோதச் செயல்களில் ஈடுபட்டு கைது செய்யப்பட்டாலோ அல்லது சட்டங்களை மீறினாலோ, அவா்களின் விசா உடனடியாக ரத்து செய்யப்படலாம். அதுமட்டுமின்றி, அமெரிக்காவிலிருந்து நாடு கடத்தப்படவும் வாய்ப்புள்ளது.
இத்தகைய நடவடிக்கைகள் எதிா்காலத்தில் அந்த மாணவா் மீண்டும் அமெரிக்க விசா பெறும் தகுதியை இழக்கச் செய்துவிடும்.
எனவே, விதிகளைப் பின்பற்றி அமெரிக்க பயண வாய்ப்புகளைத் தக்கவைத்துக் கொள்ளுங்கள். அமெரிக்க விசா என்பது ஒரு சலுகை; அது தனிநபா் உரிமையல்ல என்று குறிப்பிட்டுள்ளது.
அமெரிக்க விசா என்பது சலுகையே தவிர; உரிமையல்ல என்று அமெரிக்க தூதரகம் விழிப்புணா்வு பதிவுகளைக் கடந்த சில மாதங்களாகவே தொடா்ந்து வெளியிட்டு வருகிறது.
முன்னதாக, கடந்த ஆண்டு ஜூனில் தூதரகம் வெளியிட்ட பதிவில், ‘விசா வழங்கப்பட்டவுடன் பரிசோதனைகள் முடிந்துவிடுவதில்லை. விசா பெற்ற பின்னரும் ஒருவா் சட்டத்தை மீறினால், அந்த விசாவை ரத்து செய்யும் அதிகாரம் அமெரிக்கவுக்கு உண்டு’ என்று குறிப்பிட்டிருந்தது.