கனடாவில் இந்த வகை ஹீட்டர்கள் குறித்து எச்சரிக்கை
கனடாவில் கார்பன் மானாக்சைடு அபாயம் காரணமாக வெஸ்டா ‘Vesta’ நிறுவனத்தின் ஹீட்டர்கள் திரும்ப பெறப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க சுகாதார திணைக்களம் மற்றும் அமெரிக்க நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் ஆகியன இணைந்து, வெஸ்டா டேங்க்லஸ் ஹொட் வோட்டர் ஹீட்டர்களின் Vesta Tankless Hot Water Heater சில மாடல்கள் குறித்து திரும்பப் பெறல் (recall) அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கான காரணமாக, சில இயந்திரங்களில் வாயு வெளியேற்ற குழாய் (exhaust duct) முறிவு ஏற்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இதன் மூலம் கார்பன் மானாக்சைடு (Carbon Monoxide) வாயு வீட்டுக்குள் கசிந்துசெல்லும் அபாயம் உள்ளதாகவும், இது கடுமையான உடல்நல பாதிப்பு அல்லது மரணத்திற்கும் வழிவகுக்கக்கூடும் எனவும் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
இந்த திரும்பப்பெறுதல் வீ.ஆர்.எஸ். VRS மற்றும் வீ.ஆர்.பீ VRP மாடல்களின் அனைத்து சீரியல் எண்களையும் (serial numbers) உள்ளடக்கியது.
2017 மே மாதம் முதல் 2025 ஜூலை மாதம் வரை, கனடாவில் சுமார் 4,000 இயந்திரங்களும், அமெரிக்காவில் சுமார் 36,700 இயந்திரங்களும் விற்கப்பட்டுள்ளன என ஹெல்த் கனடா தெரிவித்துள்ளது.
இந்த மாதம் 10ம் திகதி வரையில், கனடாவில் 10 மற்றும் அமெரிக்காவில் 33 முறிவு சம்பவங்கள் பதிவாகியுள்ளன. எனினும் இதுவரை எந்த காயமோ அல்லது மரணமோ ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது.