அமெரிக்க ராணுவத்தின் எஃப்-16 ரக போர் விமானத்திற்கு நேர்ந்த கதி ; பயிற்சியின் போது விபத்து
டெக்சாஸை தளமாக கொண்ட அமெரிக்க ராணுவத்தின் எஃப்-16 ரக போர் விமானம் ஒன்று, மிச்சிகனில் நடந்த பயிற்சி நடவடிக்கையின் போது விபத்துக்குள்ளானது.
விபத்தைத் தொடர்ந்து போர் விமானத்தில் இருந்த விமானி வெளியேற முடிந்ததாக, அந்த விமானத்திற்கு சொந்தமான பிரிவு தெரிவித்தது.

"149-ஆவது ஃபைட்டர் விங்கிற்கு ஒதுக்கப்பட்ட டெக்சாஸ் ஏர் நேஷனல் கார்டின் எஃப்-16 ஃபைட்டிங் ஃபால்கன் விமானம், டிராவர்ஸ் சிட்டி அருகே வழக்கமான பயிற்சி பணியின் போது விபத்துக்குள்ளானது," என்று அந்தப் பிரிவு தனது ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
"விமானி விமானத்திலிருந்து வெற்றிகரமாக வெளியேறினார். இந்தச் சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது," என்று அது மேலும் விவரங்கள் அளிக்காமல் தெரிவித்தது.
மேலும், அந்த வடக்கு மாகாணத்தின் இரண்டு அமெரிக்க செனட்டர்களில் ஒருவரான கேரி பீட்டர்ஸ், பேசும் போது, "டிராவர்ஸ் சிட்டிக்கு அருகே நடந்த விமான விபத்து குறித்து நான் அறிந்திருக்கிறேன்.
இந்தச் சம்பவம் குறித்த கூடுதல் தகவல்களைப் பெற நாங்கள் பணியாற்றி வருவதால், நிலைமையை உன்னிப்பாக கண்காணித்து வருகிறோம்" என்றும் கூறினார்.