அமெரிக்காவின் தேசிய இணையப் பாதுகாப்புப் பணிப்பாளர் பதவி நீக்கம்!
அமெரிக்காவின் தேசிய இணையப் பாதுகாப்புப் பணிப்பாளர் ஷோன் கெய்ர்ன்கிராஸ் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக வெள்ளை மாளிகைக்கு நெருக்கமான வட்டாரங்கள் வியாழக்கிழமை தெரிவித்துள்ளன.
அமெரிக்காவில் இடம்பெற்ற பாரிய தொழில்நுட்பத் தடைகள் மற்றும் செயற்கை நுண்ணறிவு அச்சுறுத்தல்கள் குறித்த கவலைகள் அதிகரித்துள்ள நிலையில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
குறித்த பதவியை வகிப்பதற்கான போதிய தகுதிகள் கெய்ர்ன்கிராஸிடம் இல்லை என்பதால், அவரைப் பதவி நீக்கம் செய்யும் முடிவுக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் முழுமையான ஆதரவை வழங்கியதாக அந்த வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன.

இதனையடுத்து, செனட் சபையின் அங்கீகாரம் பெற்றவரும், இத்துறைக்குப் பொருத்தமான தகுதிகளைக் கொண்டவருமான பாதுகாப்புத் திணைக்களத்தின் தற்போதைய தலைமைத் தகவல் அதிகாரி கிர்ஸ்டன் டேவிஸ், பதில் தேசிய இணையப் பாதுகாப்புப் பணிப்பாளராகப் பொறுப்பேற்கவுள்ளார்.
அண்மைக் காலமாக அமெரிக்காவில் ஏற்பட்ட பாரிய தொழில்நுட்பத் தடைகளால் விமானப் போக்குவரத்து, தகவல் தொடர்பு மற்றும் மின்வணிக சேவைகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டன.
அத்துடன், தேசிய பாதுகாப்பு முகவரகத்தின் அதி-இரகசிய உள்நாட்டுத் தகவல் தொடர்பு வலையமைப்பும் இதனால் பாதிக்கப்பட்டிருந்தது.
தேசிய இணையப் பாதுகாப்புப் பணிப்பாளராக நியமிக்கப்படுவதற்கு முன்னர், ட்ரம்பின் முதலாவது பதவிக்காலத்தில் வெள்ளை மாளிகையின் பல்வேறு பதவிகளில் கெய்ர்ன்கிராஸ் பணியாற்றியுள்ளார்.
அதற்கு முன்னதாக, 2016 ஆம் ஆண்டு தேர்தல் காலப்பகுதியில் குடியரசுக் கட்சியின் தேசியக் குழுவின் தலைமைச் செயற்பாட்டு அதிகாரியாகவும் அவர் கடமையாற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.