வெள்ளைமாளிகை துப்பாக்கிசூடு ; ட்ரம்பை கேலி செய்து வீடியோ வெளியிட்ட ஈரான்
அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் வாஷிங்டன் ஹில்டன் ஹோட்டலில் பங்கேற்ற வெள்ளை மாளிகை பத்திரிகையாளர் சங்க விருந்தில் மர்ம நபர் துப்பாக்கிச்சூடு நடத்தினார். இதில் அவர் உயிர் தப்பினார்.
இந்நிலையில் விருந்தில் நடந்த துப்பாக்கிச் சூடு ஒரு திட்டமிடப்பட்ட நாடகம் என ஈரான் வீடியோ வெளியிட்டு கிண்டல் செய்துள்ளது.
ஈரான் மீதான போர் முடிவு, பாலியல் குற்றவாளி எப்ஸ்டீன் உடனான தொடர்பு குறித்த ஆவணங்கள், வரிகளால் விலைவாசி உயர்வு, குடியேற்றத்துக்கு எதிராக அடக்குமுறை ஆகியவை அவருக்கு எதிரான போக்குக்கு முக்கிய காரணமாக சுட்டப்படுகின்றன
இந்த சூழலில் இதை மறைத்து நாட்டு மக்களை திசைதிருப்ப ட்ரம்ப் இந்த கொலை முயற்சி நாடகத்தை அரங்கேற்றியுள்ளதாக ஈரானின் அந்த அனிமேஷன் வீடியோ சித்தரிக்கிறது. இந்த வீடியோ குழந்தைக விளையாடும் 'லெகோ' பொம்மைகளை வைத்து உருவாக்கப்பட்டுள்ளது.
இதில் ட்ரம்ப் மேடையில் பேசுவது போலவும், திடீரென துப்பாக்கிச் சூடு நடந்ததும் பாதுகாப்பு அதிகாரிகள் அவரைத் தூக்கிச் செல்வது போலவும் காட்சிகள் உள்ளன. பின்னணியில் ஒரு ராப் பாடல் ஒலிக்கிறது.
மக்களிடம் ஒவ்வொரு முறையும் உங்கள் செல்வாக்கு குறையும் போது, பழைய நாடகத்தையே நீங்கள் மீண்டும் அரங்கேற்றம் செய்கிறீர்கள் என்று அந்த பாடல் வரிகள் கூறுகின்றன. ட்ரம்ப்புக்கு பலவீனமான ஈகோ இருப்பதாகவும் அந்தப் பாடல் எள்ளி நகையாடுகிறது.
இந்த வீடியோவை ஈரான் ஆதரவு குழு வெளியிட்டுள்ளது. இதற்கு முன்பும் இந்தக் குழு இது போன்ற லெகோ வீடியோக்களை வெளியிட்டுள்ளது.