வெள்ளை மாளிகையின் சமூக ஊடகப் பதிவுகளால் வெடித்துள்ள சர்ச்சை!
அமெரிக்காவில் இடைக்காலத் தேர்தல் நடைபெற சில தினங்களே உள்ள நிலையில், டிரம்ப் நிர்வாகத்தின் அதிகாரப்பூர்வ சமூக ஊடகக் கணக்குகளில் வெளியிடப்பட்டுள்ள சில படங்கள் மற்றும் பதிவுகள் இனவாதத்தையும் பதற்றத்தையும் தூண்டும் வகையில் அமைந்திருப்பதாக விமர்சகர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
மருத்துவச் செலவுகள் மற்றும் பொருளாதார நெருக்கடிகளால் மக்கள் அவதியுறும் இக்காலகட்டத்தில், வரிகளைப் பாதுகாக்கவும், சட்டவிரோதக் குடியேற்றங்களை ஒடுக்கவும், உணவு உதவித் திட்டங்களில் நடைபெறும் முறைகேடுகளைக் தடுக்கவும் தீவிர நடவடிக்கை எடுக்கப்படுவதாகக் காட்டுவதற்கு அரசு முயற்சித்து வருகிறது.
இதன் ஒரு பகுதியாகவே இந்தப் சர்ச்சைக்குரிய பதிவுகள் வெளியாகியுள்ளன.

அமெரிக்க விவசாயத் துறைச் செயலாளர் புரூக் ரோலின்ஸ் சனிக்கிழமை தனது X தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டார்.
அதில், கறுப்பின நபர் ஒருவர் கட்டுக்கட்டாகப் பணக் கட்டுகளின் முன்னால் நின்று கொண்டு, எரியும் பணத் தாள் ஒன்றை உயர்த்திப் பிடித்துள்ள படம் இடம்பெற்றுள்ளது.
அதன் மேலே "SNAP FRAUDSTER" (உணவு உதவித் திட்டத்தில் மோசடி செய்தவர்) என்ற தலைப்பு உள்ளது. 'ஸ்பிரிட் ஹாலோவின்' ஆடைப் பொதி போன்ற பின்னணியில், "சில உடைகளுக்கு விலைச்சீட்டு இருக்கும். ஆனால் இந்த உடைக்குச் சிறைத்தண்டனைதான் கிடைக்கும்" என்ற வாசகமும் இடம்பெற்றுள்ளது. இந்த புகைப்படத்தில் உள்ள நபர், சமூக ஊடகங்களில் 'ஷாட்டி டிரெட்' என்ற பெயரில் அறியப்படும் மெர்சிடீஸ் ரிஷார்ட் நியூ ஆவார்.
இவர் ஜோர்ஜியா மாகாணத்தில் SNAP உணவு உதவித் திட்டத்தின் மூலம் 4 மில்லியனுக்கும் அதிகமான நிதியை மோசடியாகப் பெற்ற குற்றத்திற்காக அக்டோபரில் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.
இதற்கு முன்னதாக, கடந்த வியாழக்கிழமை வெள்ளை மாளிகையின் அதிகாரப்பூர்வ X கணக்கில் 'சோம்ப்ரேரோ' (Sombrero - மெக்சிகன் பாரம்பரிய தொப்பி) வடிவில் செதுக்கப்பட்ட பூசணிக்காயின் படம் ஒன்று பகிரப்பட்டு, அதில் "Spooky szn is here" (பயங்கரமான ஹாலோவின் பருவம் வந்துவிட்டது) எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.
வெள்ளை மாளிகை அதிகாரப்பூர்வக் கணக்குகளைப் பயன்படுத்தி இதுபோன்ற சர்ச்சைக்குரிய மற்றும் இனவாதத்தைத் தூண்டும் படங்களைப் பகிர்வது இது முதல் முறையல்ல எனப் புகார்கள் எழுந்துள்ளன.