சுலோவக்கியா நாட்டின் பிரதமர் மீது துப்பாக்கி சூட்டை நடத்தியது யார்? வெளிவரும் தகவல்கள்
சுலோவக்கியா நாட்டின் பிரதமர் ராபர்ட் பிகோ மீது மர்மநபர் ஒருவர் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் அவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அதிதீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, சுலோவக்கியா பிரதமர் மீது துப்பாக்கி சூடு நடத்தியவர் லெவிஸ் நகரில் வன்முறைக்கு எதிரான இயக்கம் ஒன்றை நிறுவியவர் என்று சமூக ஊடகத்தில் அவரை பற்றிய காணொளி ஒன்று தெரிவிக்கின்றது.
இந்த இயக்கத்திற்கு என்று தனியாக பேஸ்புக் பக்கம் ஒன்றும் உள்ளது.
அதில், சமூகத்தில் வன்முறை பரவலை தடுக்கும் இலக்குடன் வளர்ந்து வரும் அரசியல் இயக்கம் என அதில் விளக்கம் கொடுக்கப்பட்டு இருந்தது.
ஐரோப்பாவில் போர் மற்றும் வெறுப்பை தடுப்பதற்காகவும் இந்த இயக்கம் உள்ளது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
சுலோவக்கியா நாட்டின் பிரதமர் 59 வயதான ராபர்ட் பிகோ, தலைநகரில் இருந்து வடகிழக்கே 150 கி.மீ. தொலைவில் உள்ள ஹண்ட்லோவா நகரில் கூட்டம் ஒன்று நேற்று மதியம் நடத்தப்பட்டது. இதில், அவருடைய ஆதரவாளர்கள் கலந்து கொண்டனர்.
ஆதரவாளர்களுடனான இந்த சந்திப்புக்கு பின்னர் பொது மக்களையும் அவர் சந்தித்து பேசினார்.
அப்போது, அந்த கூட்டத்தில் இருந்த மர்ம நபர் ஒருவர் திடீரென துப்பாக்கியால் பிகோவை நோக்கி பல முறை சுட்டுள்ளார். இதனால், அவரை சுற்றி நின்றவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
துப்பாக்கி சூட்டில், பிகோவின் வயிற்றில் பலத்த காயம் ஏற்பட்டது. இடுப்பு பகுதியிலும் குண்டு பாய்ந்தது. அவர் சரிந்து கீழே விழுந்ததும், உடனடியாக அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.