கனடாவில் காட்டுத் தீ காரணமாக மூடப்பட்ட அதிவேக நெடுஞ்சாலை
கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பிய மாகாணத்தில் காட்டுத் தீ காரணமாக கோகுயஹல்லா நெடுஞ்சாலை (Highway 5) மூடப்பட்டது.
மிகவும் நெரிசல் மிக்க இந்த சாலை காட்டுத் தீ காரணமாக இவ்வாறு இரண்டு திசைகளிலும் மூடப்பட்டுள்ளது.
ஹோப் (Hope) மற்றும் மெரிட் (Merritt) இடையிலான பகுதி, அருகிலுள்ள மைன் க்ரீக் (Mine Creek) காட்டுத்தீ தாக்கம் காரணமாக மூடப்பட்டதாக அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
மூடப்பட்ட நெடுஞ்சாலைக்கு பதிலாக இலக்கம் 1 மற்றும் 3 ஆகிய நெடுஞ்சாலைகளை பயன்படுத்துமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
இந்த மைன் க்ரீக் காட்டுத்தீ திங்கள்கிழமை கண்டறியப்பட்டதுடன், தற்போது அது சுமார் 483 ஹெக்டேர்களுக்கு மேல் பரவியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த தீ இன்னும் கட்டுப்பாட்டுக்கு அப்பால் எரிந்து கொண்டிருப்பதாக பிரிட்டிஷ் கொலம்பியா காட்டுத்தீ சேவை தெரிவித்துள்ளது.
மின்னல் தாக்கம் காரணமாக இந்த காட்டுத்தீ ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
கனடாவின் பல இடங்களில் இவ்வாறு காட்டுத் தீ பரவுகையினால் பாதிப்பு பதிவாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.