கட்டுக்கடங்காத காட்டுத் தீ ; ஜெர்மனியில் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்ட மக்கள்
மேற்கு ஜெர்மனியில் பெல்ஜியம் எல்லைக்கு அருகில் ஏற்பட்ட காட்டுத் தீயின் பரவலை தொடர்ந்து, 2,000 க்கும் மேற்பட்ட கிராம மக்கள் தங்கள் வீடுகளிலிருந்து வெளியேற்றப்பட்டதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்தனர்.
குறித்த பகுதியிலுள்ள கிராமத்தில் வசிக்கும் மக்கள் அதிகாலை 4:00 மணியளவில் தங்கள் வீடுகளைவிட்டு வெளியேறி, அருகிலுள்ள கிராமத்தில் உள்ள ஆரம்பப் பாடசாலையில் அமைக்கப்பட்டுள்ள உதவி மையத்திற்குச் செல்லுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்போது, மக்கள் அத்தியாவசியப் பொருட்கள், அடையாள ஆவணங்கள் மற்றும் அவசியமான மருந்துகளை மட்டும் கொண்டு செல்லுமாறு வலியுறுத்தப்பட்டுள்ளனர்.
வெளியேற்றம் வெற்றிகரமாக முடிவடைந்த போதிலும், நிலைமை தொடர்ந்து கவலைக்கிடமாக இருப்பதாகவும், தீப்பிழம்புகள் கிராமத்திலிருந்து சுமார் 300 மீட்டர் (1,000 அடி) தொலைவில் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
"இந்தக் காட்டுத் தீ உள்ளூர் சமூகத்திற்குப் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது" என்று வடக்கு ரைன்-வெஸ்ட்ஃபாலியா மாநிலத்தின் துணைப் பிரதமர் மோனா நியூபார், தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
மேலும், ஜெர்மனியின் பெரும்பகுதி வறண்ட வானிலை மற்றும் கடுமையான காட்டுத் தீ அபாயங்களை எதிர்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.