பண்டிகைக் காலச் செலவுகள் குறித்து கனடியர்களின் நிலைப்பாடு
இந்தப் பண்டிகைக் காலத்தில் தமது செலவுகளைக் குறைக்கப் போவதில்லை எனப் பெரும்பாலான கனடியர்கள் திட்டமிட்டுள்ளதாகப் புதிய தேசிய கருத்துக்கணிப்பு ஒன்று தெரிவிக்கிறது.
நானோஸ் ரிசர்ச் நிறுவனம் நடத்திய ஆய்வின்படி, 55.5 சதவீதமான கனடியர்கள் கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் செலவு செய்யவுள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.
நான்கு ஆண்டுகளுக்கு முன்பு இந்த ஆய்வை நானோஸ் நிறுவனம் தொடங்கியதிலிருந்து பதிவான மிக உயர்ந்த அளவு இதுவாகும். 2022 இல் 46 சதவீதமும், 2023 இல் 42 சதவீதமும், 2024 இல் 45 சதவீதமும் இவ்வாறு கூறியிருந்தனர்.

அதேநேரம், இந்த ஆண்டு குறைவாகச் செலவு செய்யப்போவதாக 35.2 சதவீதமானோர் தெரிவித்துள்ளனர்.
இது இதுவரை பதிவான மிகக் குறைந்த விகிதமாகும். 2024 இல் 48.2 சதவீதமும், 2023 இல் 41.7 சதவீதமும் செலவுகளைக் குறைக்கப் போவதாகக் கூறியிருந்தனர்.
மேலும், இந்த ஆண்டு அதிகமாகச் செலவு செய்யப்போவதாக 6.3 சதவீதமானோர் தெரிவித்துள்ளனர். வயதானவர்களை விட இளைய தலைமுறையினரே பண்டிகைக் காலச் செலவுகளைக் குறைக்க அதிக வாய்ப்புள்ளதாக இந்த ஆய்வு காட்டுகிறது.
18 முதல் 34 வயதுக்குட்பட்டவர்களில் 45 சதவீதமானோர் குறைவாகச் செலவு செய்யப் போவதாகக் கூறியுள்ள நிலையில், 55 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களில் 26 சதவீதமானோரே அவ்வாறு தெரிவித்துள்ளனர்.
கடந்த ஆண்டைப் போலவே செலவு செய்யத் திட்டமிட்டுள்ளவர்களில் பெண்களை (51.9%) விட ஆண்களே (59.2%) அதிகமாக உள்ளனர். அதேபோல், பெண்களே (38.4%) ஆண்களை (31.9%) விடச் செலவுகளைக் குறைக்க அதிக வாய்ப்புள்ளது.
முன்னதாக இந்த மாத தொடக்கத்தில் வெளியான மற்றொரு நானோஸ் ஆய்வில், பிள்ளைகளின் பாடசாலைக்குப் புறம்பான செயற்பாடுகளுக்குச் செலவழிப்பதற்காக 14 சதவீத கனடியப் பெற்றோர்கள் கடன்படுவதாகவும், 30 சதவீதமானோர் ஏனைய செலவுகளைக் குறைப்பதாகவும் தெரியவந்திருந்தது குறிப்பிடத்தக்கது.
கடந்த ஒக்டோபர் 31 முதல் நவம்பர் 2 வரை, 18 வயதுக்கு மேற்பட்ட 1,058 கனடியர்களிடம் தொலைபேசி மற்றும் இணையவழியாக இந்த ஆய்வு நடத்தப்பட்டது.