சர்வதேச ரீதியிலான பயணங்களுக்கு தடை விதிக்கப்படுமா?
டிரம்ப் ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர் சர்வதேச பயணங்கள் தொடர்பாக கட்டுப்பாடுகள் அல்லது தடைகள் விதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்காவில் அண்மையில் நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளராக போட்டியிட்ட டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றார்.
இதையடுத்து அமெரிக்காவின் 47-வது ஜனாதிபதியாக எதிர்வரும் ஜனவரி 20ஆம் திகதி டிரம்ப் பதவியேற்க உள்ளார். ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர், நிர்வாக ரீதியாக மேற்கொள்ளப்பட இருக்கும் மாற்றங்கள் மற்றும் திட்டங்கள் குறித்து டிரம்ப் அறிவித்து வருகிறார்.
இந்த நிலையில், டிரம்ப் பதவியேற்பை முன்னிட்டு அமெரிக்காவில் உள்ள பல்வேறு கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் படித்து வரும் வெளிநாட்டு மாணவர்களில், தற்போது சொந்த நாட்டிற்கு சென்றுள்ள மாணவர்களை உடனடியாக அமெரிக்காவிற்கு திரும்புமாறு அந்தந்த கல்லூரிகளின் சார்பில் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
டிரம்ப் ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர் சர்வதேச பயணங்கள் தொடர்பாக கட்டுப்பாடுகள் அல்லது தடைகள் விதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுவதாகவும், அதன் காரணமாகவே இத்தகைய அறிவுறுத்தல்கள் வழங்கப்படுவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்க பல்கலைக்கழங்களில் பயிலும் வெளிநாட்டு மாணவர்களில் சுமார் 54 சதவீதம் பேர் இந்தியா மற்றும் சீனாவைச் சேர்ந்தவர்கள் என்று அமெரிக்க அரசின் கல்வி மற்றும் கலாசார விவகாரங்கள் துறை தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.