வினிபெக்கில் வீடற்றோர் எண்ணிக்கை தரவில் குளறுபடி!
கனடாவின் வினிபெக் நகரில் வீடற்றோரின் எண்ணிக்கை அதிகமாகக் காணப்பட்டாலும், கடந்த வசந்த காலத்தில் வெளியிடப்பட்ட புள்ளிவிவரங்களில் வீடற்றோர் மற்றும் தற்காலிகக் தங்குமிடங்களில் வசிப்போரின் எண்ணிக்கை மிகவும் மிகைப்படுத்திக் காட்டப்பட்டிருக்கலாம் என்று தெரியவந்துள்ளது.
அரசுத் தரவுத் தளத்தை அடிப்படையாகக் கொண்டு, கடந்த மார்ச் மாத இறுதியில் வெளியிட்ட அறிக்கையில், சுமார் 4,400 பேர் நீண்டகாலமாக வீடற்றவர்களாக வாழ்கின்றனர் எனவும், சுமார் 8,200 பேர் நிலையான இருப்பிடம் இன்றி அரசின் சேவைகளைப் பெறுகின்றனர் எனவும் தெரிவித்திருந்தது.
ஆனால், திருத்தப்பட்ட புதிய புள்ளிவிவரங்களின்படி இந்த எண்கள் முறையே 436 மற்றும் 2,200 ஆக மட்டுமே உள்ளன. இது முந்தைய எண்களை விட மிகப்பெரிய வேறுபாடாகும்.

கூட்டாட்சித் தரவு அமைப்பில் ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் சில முரண்பாடுகளைக் கண்டறிந்ததாக தெரிவித்துள்ளது.
ஒருவர் நீண்டகாலமாகச் சேவை அமைப்புகளைத் தொடர்புகொள்ளாத போதிலும், அவருடைய கோப்புகள் கணினியில் தொடர்ச்சியாக 'செயலில்' நிலையிலேயே இருந்ததே இந்தத் தவறான கணக்கீட்டிற்குக் காரணம் எனக் கூறப்படுகிறது.
திருத்தப்பட்ட இந்த புதிய எண்களும் முழுமையான துல்லியமானவை அல்ல என்று 'End Homelessness Winnipeg' அமைப்பு தெளிவுபடுத்தியுள்ளது.
தரவைச் சரிசெய்யும் ஆரம்பக்கட்ட செயல்பாட்டின் ஒருநாளில் எடுக்கப்பட்ட கணக்கு மட்டுமே இது என்பதால், முந்தைய எண்கள் மற்றும் தற்போதைய தற்காலிக எண்கள் ஆகிய இரண்டின் மீதும் முழு நம்பிக்கை இல்லை என்று அவ்வமைப்பு கூறியுள்ளது.
எனவே, 2024 தெருக்களின் கணக்கெடுப்பு அறிக்கையே தற்போதுள்ள மிகவும் நம்பகமான தரவு எனவும், அதன்படி நகரில் சுமார் 2,469 பேர் வீடற்றவர்களாக இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.