டொராண்டோவில் நாய் தாக்குதல்: பெண் கைது — தப்பிய 2 நாய்களைத் தேடும் காவலத்துறை!
கனடாவின் டொராண்டோ நகரில் உள்ள பூங்கா அருகே, பெண் ஒருவரையும் அவரது செல்லப் பிராணியையும் இரு நாய்கள் கொடூரமாகத் தாக்கிய வழக்கில் 40 வயது பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த வியாழக்கிழமை அவென்யூ ரோடு மற்றும் ராக்ஸ்பரோ தெரு அருகே உள்ள பூங்காவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
பாதிக்கப்பட்டவர் தனது நாயுடன் சென்று கொண்டிருந்தபோது, வேலியிடப்பட்ட பகுதியில் இருந்து தப்பி வந்த பிட்புல் அல்லது புல் டெரியர் வகையைச் சேர்ந்த இரு பெரிய நாய்கள் அவர்கள் மீது பாய்ந்து தாக்குதல் நடத்தின.

தாக்குதலில் பாதிக்கப்பட்ட நபருக்கு லேசான காயங்களும், அவரது நாய்க்கு உயிருக்கு ஆபத்தான பலத்த காயங்களும் ஏற்பட்டுள்ளன.
சனிக்கிழமை இது குறித்துக் காவல்துறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. ஞாயிற்றுக்கிழமை, டொராண்டோவைச் சேர்ந்த டேனிச்சியா பிளாக் என்பவரைக் காவல்துறையினர் கைது செய்தனர்.
குற்றவியல் அலட்சியத்தால் உடல் காயம் ஏற்படுத்துதல், நாய்கள் அடிப்பதை அல்லது தாக்குவதைத் தடுக்கத் தவறியது, மனிதனையோ அல்லது வளர்ப்புப் பிராணியையோ நாய் கடிக்க விட்டது, காவல் துறை அதிகாரியின் கடமையைச் செய்ய விடாமல் தடுத்தது உள்ளிட்ட குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன.
தாக்குதலில் ஈடுபட்ட இரு நாய்களும் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை.
இந்நாய்கள் இருக்கும் இடம் குறித்துத் தகவல் தெரிந்தவர்கள் உடனடியாக அதிகாரிகளையோ அல்லது 'கிரைம் ஸ்டாப்பர்ஸ்' (Crime Stoppers) அமைப்பையோ ரகசியமாகத் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
"நாய்களை எங்காவது கண்டால் பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்; எக்காரணத்தைக் கொண்டும் அருகில் செல்ல வேண்டாம்" என்று காவலத்துறை அறிவுறுத்தியுள்ளது.