அமெரிக்க தொழிலதிபர்கள் மீது பாலியல் முறைப்பாடளித்த பெண் மர்ம முறையில் மரணம்
அமெரிக்காவின் பிரபல தொழிலதிபர்களான அலெக்சாண்டர் சகோதரர்கள் மீது பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்த முதல் பெண் ஒருவர் மர்ம முறையில் உயிரிழந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
பிரபல இரட்டைச் சகோதரர்களான ஓரன் மற்றும் அலோன் ஆகியோர் மீது 2012 ஆம் ஆண்டு நியூயோர்க்கில் வைத்து தன்னை பாலியல் வன்புணர்வு செய்ததாக கேட் வைட்மேன் என்பவர் 2024 மார்ச் மாதம் வழக்குத் தொடர்ந்தார்.
இவரைத் தொடர்ந்து மேலும் பல பெண்கள் இச்சகோதரர்கள் மீது இவ்வாறான முறைப்பாடுகளை முன்வைத்தனர். 45 வயதான கேட் வைட்மேன், கடந்த ஆண்டின் இறுதியில் அவுஸ்திரேலியாவில் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார்.

நியூ சவுத் வேல்ஸ் மரண விசாரணை அதிகாரி இது குறித்து விசாரணை நடத்தி, அவரது மரணத்தில் எந்த மர்மமும் இல்லை என்று முடிவெடுத்துள்ளார்.
குடும்பத்தாரின் தனியுரிமை கருதி மேலதிக விபரங்கள் வெளியிடப்படவில்லை. அலெக்சாண்டர் சகோதரர்கள் மீதான குற்றவியல் விசாரணை இந்த மாத இறுதியில் (ஜனவரி 26) தொடங்க உள்ளது.
ஓரன், அலோன் மற்றும் அவர்களது மூத்த சகோதரர் தால் (Tal) ஆகிய மூவர் மீதும் பாலியல் கடத்தல் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
குறைந்தது 17 பெண்கள் சிவில் வழக்குகளைத் தொடர்ந்துள்ளனர். சுமார் 60 க்கும் மேற்பட்ட பெண்களிடம் இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அலெக்சாண்டர் சகோதரர்கள் இந்தக் குற்றச்சாட்டுகளை முற்றாக மறுத்துள்ளனர். இவை அனைத்தும் பொய்யானவை என அவர்களது சட்டத்தரணிகள் வாதிடுகின்றனர்.